Saturday, April 30, 2011

ஒரு தலைக் காதல்

"இல்லை" என்ற உன் சொல்லை
ஜீரணிக்க முடியாதோ என்ற பயத்தில்
விழுங்கிவிடுகிறேன் என் காதல் வார்த்தைகளை !

Tuesday, April 26, 2011

காணவில்லை..

புழுதி மண்ணில் புரண்டு ஆடிய
பேந்தா கோலி,
பம்பரக் கயிற்றில் சேர்த்த
சோடா மூடி,
கவட்டை குச்சியால் பந்தயம் ஓட்டிய
பேட்டரி வண்டிகள்,
தெருவெங்கும் பொறுக்கி சேர்த்த
சிகரெட் அட்டைகள்,
சீட்டுக் கட்டில் உருவாக்கிய
கோபுரங்கள்,
மூச்சிறைக்க ஓடி ஆடிய
எறிக்குச்சி ஆட்டம்,
அடி வாங்கிக் கொண்டே ஆடிய
பே பே பந்து,
தண்டவாள காசு,
பம்பாய் மிட்டாய் வாட்சு,
என் பால்யத்தோடு தொலைந்து போன
விளையாட்டுக்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ..

Monday, April 25, 2011

சந்தேகம்

மரமே இல்லாமல் பூத்துக் குலுங்கும்
நட்சத்திரப் பூக்கள்,
ஏற்றுவார் இன்றி எரிந்துக்கொண்டிருக்கும்
சூரிய தீபம்,
விலாசம் தெரியாமல் அலைந்துக்கொண்டிருக்கும்
விண்மீன் கூட்டம்,
அறிவியலுக்கே தெரியாத
அண்டத்தின் ரகசியங்கள்,
அனைத்தையும் மிஞ்சியது
மழலையின் சந்தேகம்,
"நிலாவுக்கு லைட்டு போட்டது யாரும்மா ?"   

Saturday, April 23, 2011

சூசகம்..

"கடமை தவறியது உன் விரல்கள்
அதையும் நிறைவேற்றியது உன் விழிகள் !"
என்று நீ சொன்ன பிறகு தான் உணர்ந்தேன்,
மலர்க் கொய்வது விரல்களின் கடமையோ ?
- காலம் கடந்த ஞானம்

முத்தம்

இதழ்கள் சண்டையிடும்
இனிமையான யுத்தம் !

புறக்கணிப்பு

கோழைக்கு கொடுக்கப்பட்ட
தண்டனை,
வீரனுக்கு கொடுக்கப்பட்ட
ஊக்க மருந்து!

Thursday, April 21, 2011

கொடூரம்..

இந்த வார்த்தையை இதற்கு முன் பல முனைகளிலிருந்து கேட்டு, பயன்படுத்தி, அர்த்தம் புரிந்திருந்தபோதிலும், அதை முழுதாய் உணர்ந்ததில்லை நான். "கொடூரமாய் கொலை செய்யப்பட்டார்", "கொடூரமாய் கற்பழிக்கப்பட்டார்" என்றெல்லாம் நாளிதழ்களில் படிக்கும்போது அதன் அர்த்தம் விளங்கிற்றே ஒழிய அந்த தாக்கத்தை பெரிதாய் மனதிற்கு கொண்டு சென்றதில்லை, நேற்று வரை..

ஃபேஸ் புக்கின் முதற்பக்கத்தை அலசிக்கொண்டிருந்த என் கண்களுக்கு தென்பட்டது என் நண்பன் பகிர்ந்திருந்த யூ-ட்யூப் நிகழ்படம் (வீடியோ). இலங்கையில் அரங்கேறிய இனப்படுகொலையை ஐ.நா பத்திரிக்கையாளர் ஒருவர் படம் பிடித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது அந்த நிகழ்படத்தில்.   சற்று நேரமே ஓடிய அந்த நிகழ்படப்பதிவில் தோன்றிய காட்சிகள் என் நெஞ்சை உலுக்கிப்போட்டது என்றே சொல்லலாம். அத்தனைக் கொடூரம். அப்பொழுது தான் உணர்ந்தேன் 'கொடூர'த்தின் அர்த்தத்தை.

ராணுவத்தினர் ஒருவர் பின் ஒருவராக இரண்டு ஆண்களை நிர்வாணப்படுத்தி, கண்களைக் கட்டி அழைத்து வந்தார்கள். பின்புலத்தில் துப்பாக்கி சத்தம் வெடித்துக் கொண்டிருக்கப் பிணங்களால் சூழப்பட்டிருந்த அந்த இடத்தை பார்க்கவே சகிக்கவில்லை. அவ்விருவரையும் ராணுவத்தினர் முதுகில் உதைத்து பின்னந்தலையில் சுட்டதைப் பார்த்தபோது நெஞ்சம் அதிர்ந்தது. கொட கொடவென்று உதிர்ந்த குருதியில் வழிந்தோடிக் காய்ந்து போனது மனித நேயமும், உண்மையான வீரமும். யார் இவர்கள் ? என்ன குற்றத்துக்காக வரையறுக்கப்பட்ட தண்டனை இது ? இது இலங்கையில் நடந்தது தானா ? இவர்கள் புலிகளா ? இல்லை அப்பாவித் தமிழர்களா ? அனைத்துக்கும் காரணம் வெறும் இன வெறியா ? என்னால் துளியும் யூகித்துப் பார்க்க முடியவில்லை.

சக மாணவனை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் அடக்கி பேருந்தில் கிடத்தியவனுக்கு 15 வருடங்களுக்கு பிறகு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது இந்திய நீதிமன்றம். கைதானவர்களையும் சரணடைந்தவர்களையும் அசிங்கப்படுத்தி சித்ரவதை செய்து சாகடிப்பது சிங்கள நீதியோ ? விளங்கவில்லை.

விடுதலைப்புலிகள் சிக்கிக்கொண்டால், சயனைடு குப்பிகளை சப்பி இறந்து போவார்கள் என்று கேள்விப்பட்டபோதெல்லாம் அவர்களை கோழைகள் என்று கூறி நகைத்ததுண்டு. ஆம், தூக்குக்கயிற்றுக்கு முத்தமிட்டு மரணத்தை ஏற்றுகொண்டதாய் கட்டபொம்மன் கதை கேட்டு வளர்ந்த நமக்கு, தற்கொலை கோழத்தனம் தான். ஆனால் வெள்ளையனுக்கு இருந்த கட்டுப்பாடுகள் கூட இன்று கூட்டம் கூட்டமாய் மனிதர்களைக் கொன்று குவித்திருக்கும் இலங்கை ராணுவத்திற்கு இல்லையே.

சரணடைந்த பின்னும் சல்லடையாய் துளைக்கப்பட்டு மனிதம் இழந்த மானுடர் கையால் மானம் இழந்து உயிர்விடல்விடவும் தற்கொலை மேலானது தான். ஏற்கனவே இருண்டு கொண்டிருக்கும் மனித மனங்கள் இது போன்ற நிகழ்வுகளைக் கண்டால் இரும்பாய் உறைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது.

தமிழர்கள் உயிர் காக்க புரட்சியாய் வெடித்து பலர் போராடிக்கொண்டிருக்கையில் வெறுமனே அமர்ந்து இணையவெளியில் என் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருப்பதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது. வேறென்ன செய்ய ? இதைப் படித்துகொண்டிருக்கும் உங்களைப்போல நானும் ஒரு கையாலாகாதவன் தான்.

மனிதம் இனி மெல்லச் சாகும்..

Wednesday, April 20, 2011

அழகு

மழலைச் சிரிப்பு,
மாலைக் கதிர்,
சுடும் வெயிலில் சிறு தூறல்,
ஆடும் மயிலின் விரி தோகை,
பருவப் பெண்ணின் நாணம்,
நீலம் பூத்த வானம்,
கடலுக்கு அலை,
கோவிலுக்கு சிலை,
கற்றை குழல்,
ஒற்றை தாமரை,
எனக்கு நீ,
உனக்கு ?

Tuesday, April 19, 2011

புரட்சி

"நூறு இளைஞர்களைத் தாருங்கள்,
வலிமையான பாரதத்தை உருவாக்குகிறேன் !"
- விவேகானந்தர்
இதோ இருக்கிறோம் ஆயிரக்கணக்கில்..
தேடுகிறோம் ஒரு விவேகானந்தரை !! 

காதல்

கரைக்கும் அலைக்கும் உள்ள தொடர்பு.
வரும்.. ஆனா வராது !

கோடை

பூமித்தாய்க்குக் காய்ச்சல்
அவள் மூச்சுக்காற்று
அனலாய் வீசுகிறதோ ?

பேதமை

பாட்டி சொன்ன கதை:
"கௌரவர்கள் நூறு பேர்"
எண்ணிப் பார்க்க
குழந்தை கையில்
விரல்கள் இல்லை !

Monday, April 18, 2011

அடை மழை

உறவாடினோம்
சிரித்தோம்
அழுகிறோம்
- இப்படிக்கு மேகம்

Sunday, April 17, 2011

ஊழல்

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி!
எத்தனை பூஜ்ஜியம் என்று தெரியவில்லை
பூஜ்ஜியம் கண்டுபிடித்த இந்தியனுக்கு !!

ஒளிச்சிதறல்

காற்றில்லா வெட்ட வெளிக்கு
கதிரவன் பூசிய நீலச் சாயம்
- வானம்

Friday, April 15, 2011

தெரியவில்லை...

நான் பெங்களூர் வந்த சமயத்தில் நண்பர்களோடு அடிக்கடி சுற்றித் திரிவது வழக்கம். பெங்களூர் வரும் முன்பே இங்கிருக்கும் மகாத்மா காந்தி சாலையை (M.G. Road) பற்றி நிறைய கேள்விப் பட்டிருந்தேன். "அப்படி என்ன தான் இருக்கிறது ? பார்க்கலாம்" என்று ஒரு நாள் மாலை கிளம்பிச் சென்றோம்.  

M.G. Road அருகிலிருந்த Brigade Road-ல் நிலக்கடலை வாங்கி கொறித்துக் கொண்டே நடை போட்டோம். எதிர்ப்பார்த்து வந்த அளவிற்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை. விரைவாக இயங்கிக் கொண்டிருந்த நகர வீதி; பெரிய பெரிய வணிக வளாகங்கள்; எங்களைப் போலவே சுற்றிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம். 

சிறிது தூரம் சென்ற பிறகு தான் கவனித்தேன், அந்த இடத்தைச் சுற்றி நிறைய பொது விடுதிகள் (pubs) இருந்தன. ஆண் பெண் வித்தியாசம் பாராமல் குடித்துவிட்டு கூத்தாடும் கலாச்சாரம். இவர்கள் பாதுகாப்புக்காக ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் வில்லன்கள் போல் கோட்டு-சூட்டு போட்ட அடியாட்கள். "ஓ, இதற்குத் தான் இந்த இடம் பிரசித்தமோ ! நமக்கேன் வம்பு.." என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தோம்.
சற்றுக் கடைகளுக்குள் சென்று பார்க்கலாம் என்றால், எல்லாம் யானை விலை, குதிரை விலை. கேட்டால் "Branded" என்று பதில் வரும். அது என்னவோ, நாம் எதுவும் வாங்க வரவில்லை என்று நினைத்துக் கொண்டே, ஆங்கிலத்தில் ஸ்டைலாக சொல்வார்களே Hands-Free Shopping, அதாவது "வெறுங்கை வியாபாரம்", அதைச் செய்துவிட்டு வெளியேறினோம். 

"ஓ, இது பணக்காரர்களின் வீதியோ ?" என்று அண்ணார்ந்து பார்த்து யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், "அண்ணா" என்றது ஒரு குரல். இந்த ஊரில் நம்மை யார் "அண்ணா" என்றழைப்பது என்று குனிந்து பார்த்தால், கிழிந்த சட்டை, அழுக்கு டவுசர் - பிச்சை எடுக்கும் சிறுவன்.என் கணிப்பு தவறு தான். இந்தியாவில் அப்படி ஒரு வீதி இல்லை. எனக்கு இரண்டு விஷயங்கள் ஆச்சர்யம் கொடுத்தன. ஒன்று, இங்கு நான் கன்னடத்தில் பேசினால் கூட என்னைத் தமிழன் என்று சரியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள் (இன்று வரை). என் முகத்தில் என்ன எழுதியா ஒட்டியிருக்கிறது என்று கூட நினைத்ததுண்டு. இரண்டு, இங்கே நான் பார்க்கும் பிச்சைக்கார சிறுவர்களில் முக்கால்வாசிப் பேர் தமிழர்கள். சொந்த ஊர் எது என்று கேட்டால், ஓசூர், கிருஷ்ணகிரி என்பார்கள்.

இது போன்ற சிறுவர்-சிறுமிகளைப் பார்க்கும்போது, அழைத்துக் கொண்டு போய் எங்கள் ஊர் தொடக்கப்பள்ளியில் கொண்டு போய் சேர்த்து விடலாம் என்று தோன்றும். வீதியில் சந்திக்கும் எத்தனையோ சிறுவர்களை அழைத்திருக்கிறேன். பெயருக்காக கூட ஒருவரும் "வருகிறேன்" என்று சொன்னதில்லை. எப்படி திட்டினாலும், கண்டும் காணாதவர்கள் போல் திரும்பி நின்றாலும், முதுகைச் சுரண்டிச் சுரண்டித் தொல்லை செய்பவர்கள் கூட, இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் உடனே ஒதுங்கிச் சென்று விடுவார்கள். படிப்பது என்ன பிச்சை எடுப்பதை விட கொடுமையானதா ? எனக்கு புரியவில்லை.

சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். என்னை அழைத்த அந்த சிறுவனிடமும் அதே விளைவைத் தான் எதிர்ப்பார்த்தேன். "என்னடா, என் கூட வரியா ? ஸ்கூல்ல சேத்து படிக்க வைக்கிறேன்." என்றேன். முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கைகள் மட்டும் காசு கேட்டு மேலும் கீழும் அல்லாடிக் கொண்டிருந்தன. நான் மறுபடியும் கூறினேன், "காசெல்லாம் குடுக்க மாட்டேன். கூட வரேன்னு சொல்லு, கூட்டிட்டு போய் சட்ட துணி மணி வாங்கித்தறேன், பள்ளிகூடத்துல சேத்து விடுறேன்". அவனிடம் எந்த பதிலும் இல்லை. நண்பர்களும் அவனுக்கு காசு கொடுக்கவில்லை. "வரலைல, கிளம்பு, இங்க நிக்காத, கிளம்பு"- என்றேன். உடனே சொன்னான், "ஆமாம் சார், இப்படி சொல்லி கூட்டிட்டு போவீங்க, அப்புறம் அடுத்த பஸ் ஸ்டாப்ல எறக்கி விட்டுட்டு போயிருவீங்க. அங்கேந்து இங்க வரைக்கும் நான் தான் நடக்கணும். போங்க சார்" என்று சொல்லிவிட்டு அடுத்த Customer-ஐ நோக்கி நடந்தான்.ஒரு நிமிடம் சுரீர் என்றது, "இப்படி கூடவா செய்கிறார்கள்" என்று.

இன்று யோசிக்கிறேன், அவன் வருகிறேன் என்று கூறியிருந்தால், நானும் இதைத் தான் செய்திருப்பேனோ ? தெரியவில்லை..

ஏமாற்றம்..

நீ என்னைத் தொடுவாய் என்று
ஐந்து வருடம் காத்திருந்தேன் - ஆனால்
இன்றும் நீ வரவில்லை !
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

Wednesday, April 13, 2011

புல்லாங்குழல்

என் உதடுகள் தீண்டும்
ஒவ்வொரு முறையும்
காற்றில் எதிரொலிக்கும்
உன் முனகல் சத்தம்
- வேணுகானம் !

பொய்

கவிஞன் சொன்ன பொய்:
"காற்றுக்கென்ன பூட்டு?"
பலூனுக்குள் காற்று !

ஓவியனே..

உன் விரல் பட்ட வெட்கத்தில்
தூரிகை இட்ட முத்தம்,
உன் ஓவியம் !

குறளோசை