Monday, October 21, 2013

தமிழும் தமிழனும் - 1

முன்குறிப்பு: இது தமிழாராய்ச்சிக் கட்டுரை அல்ல; இலக்கணப் பாடமும் அல்ல. நண்பன் பகிர்ந்திருந்த கவிதை ஒன்றை படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய சிலபல எண்ணங்களுக்கும், அறிந்து கொண்ட சில விஷயங்களுக்கும் எழுத்து வடிவம் கொடுப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

என்ன தான் நாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் படித்து வளர்ந்திருந்தாலும், தமிழில் உள்ள பல நுணுக்கங்கள் நம் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை. தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கும், தமிழ் இலக்கியப் புத்தகங்களை அதிகம் படிப்பவர்களுக்கும் கூட ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுவதென்பது சற்றுக் கடினமாகவே ஆகிவிட்டது. அதிலும் என்னைப் போல் சிலர், ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுகிறேன் பேர்விழி என்று ஒற்றெழுத்துக்களை எல்லா இடங்களிலும் விளாசிவிடுவதும் சகஜமாகிவிட்டது.

அது என்ன ஒற்றுப்பிழை ?

ஒற்றெழுத்து என்பது இருவேறு சொற்கள் சந்திக்கும்போதோ புணரும்போதோ சில சமயங்களில் மிகுந்து ஒலிக்கும் மெய்யெழுத்தைக் குறிக்கும். இந்த ஒற்றெழுத்தை எழுத வேண்டிய இடங்களில் எழுதாமல் விட்டாலோ, எழுதக்கூடாத இடத்தில் எழுதினாலோ, அது ஒற்றுப்பிழை (அ) சந்திப்பிழை எனப்படும்.

(எ.கா.)
கடைக்கு + சென்றேன் = கடைக்குச் சென்றேன் (ச் இல்லையேல் பிழை)
நல்ல + தம்பி = நல்லத்தம்பி (த் இருந்தால் பிழை)
தாய் + பாசம் =  தாய்ப்பாசம் (ப் இல்லையேல் பிழை)

எங்கு ஒற்று மிகும், எங்கு மிகாது என்பதற்கு தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியத்தைக் குறிப்பாகக் கொண்டு பல விதிகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இணையத்திலும் அதனைப் பற்றி பல விரிவான கட்டுரைகளும் இருக்கின்றன. ஆகையால் அதை முழுவதுமாக இங்கே நான் எழுத விழையவில்லை.

பொதுவாகப் பார்க்கும்போது இந்த ஒற்றுப்பிழைகள் படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துவது இல்லை; அதாவது பிழை இருப்பது தெரிந்தாலும் அதை ஓரங்கட்டிவிட்டு நாம் படிப்பதைத் தொடரலாம். ஆனால் சில பயன்பாடுகளில் ஒற்றுப்பிழை இருந்தால் அது நாம் எத்தனை முறைப் படித்தாலும் ஏதோ ஒரு உறுத்தலை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி ஒன்று தான் சுட்டெழுத்துக்களுடன் வரும் ஒற்றெழுத்து.

"இவன் ரொம்ப கொழப்புறான்யா. அது என்ன சுட்டெழுத்து ?" என்று கேட்பவர்களுக்கு, விக்கிபீடியா கொடுக்கும் பதில் இதோ:

சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உயிரெழுத்துகளில் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் ஆகும்.

(இதில் 'உ' என்ற சுட்டெழுத்து, தமிழ் நாட்டில் புழக்கத்தில் இல்லை. விளக்கமான பதிவு இங்கே)

(எ.கா.)
அ + காலம் = அக்காலம்
இ + மாதம் = இம்மாதம்
அ + நேரம் = அந்நேரம்
இ + வழி = இவ்வழி

இந்த பயன்பாடு நாம் பேசும் பொதுத்தமிழ் வழக்கத்தில் இல்லாதபோதும், தமிழ் மேடைகளிலும், உரைநடைகளிலும், கவிதை புனைவோரிடமும் இன்னும் வழக்கத்தில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. இது கடினமான பயன்பாடு இல்லை என்றபோதும், இது சில இடங்களில் எனக்கு ஒரு புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதை விளக்க, ஒரு எடுத்துக்காட்டை பார்போம். என் நண்பன் எழுத விரும்பியது அ + ரணத்தால் = ?
விடையைப் படிப்பதற்கு முன், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில கேள்விகளுக்கும் விடையளிக்க முயல்க:

1. அ + ரதம் = ? 
2. அ + ருசி = ?
3. இ + லஞ்சம் = ?
4. இ + ரேகை = ?
5. அ + லாபம் = ?
6. இ + யாக்கை = ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளிக்க முடிந்தால் கூட நீங்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர். என் நண்பனின் கேள்விக்கு விடையளிக்க முயற்சித்தபோது, முதலில் தோன்றியது அர்ரணத்தால். ஆனால் இப்படி எழுதியதாக எனக்கு சற்றும் நினைவு இல்லை. அடுத்த யோசனை அற்ரணத்தால். கண்டிப்பாக இதுவும் சரி இல்லை என்றே தோன்றியது. அ ரணத்தால் என்று பிரித்தே எழுதலாம் என்றால், இலக்கண ரீதியாக சரி தான் என்றபோதும், கவிதைப் பயன்பாட்டிற்கு பொருந்தி வரவில்லை. கூகுளில் நேரடியாக  இவற்றை தேடியபோதும் எதுவும் விடை தென்படவில்லை. இதைத் தேட ஆரம்பித்ததில் இணைய வழியில் பல தமிழ்த் தகவல்களையும், தமிழ் நாட்டுத் தமிழுக்கும், யாழ்ப்பாணத் தமிழுக்கும் உள்ள சில வேறுபாடுகளையும் கடந்து வந்தன என் விழிகள். அவற்றை விவரிக்க ஆரம்பித்தால் நம் தலை சுற்றும். 

இப்போது நம் கேள்விகளுக்கு விடையளிக்க, யாரோ ஒரு நண்பர் இணையத்தில் பதிந்திருந்த இந்த புணர்ச்சி விதி உதவும்:

சுட்டெழுத்துக்களும் எகர வினாவெழுத்தும் உயிரோடும் இடையின மெய்யோடும் புணரின், இடையில் வகரந் தோன்றும்; உயிரொடு புணரின் வகரம் இரட்டிக்கும்; வல்லின மெல்லின மெய்களோடு புணரின் அவ்வம் மெய்கள் மிகும்.

இதில்,
சுட்டெழுத்து + உயிரெழுத்து (அ + உயிர் = அவ்வுயிர், அ + இடம் = அவ்விடம்)
சுட்டெழுத்து + மெல்லினம் (அ + மக்கள் = அம்மக்கள், இ + நாய் = இந்நாய்)
சுட்டெழுத்து + வல்லினம் (இ + பாடல் = இப்பாடல், அ + தாமரை = அத்தாமரை)
போன்றவை நாம் ஓரளவிற்கு நாம் அறிந்தவையே.

கேள்விகளை மறுபடியும் ஒரு முறை படித்தோமானால், 
சுட்டெழுத்து + இடையினம் = ?  என்பதே நம் கேள்விக்கு விடை. மேற்கூறிய விதிப்படி,

1. அ + ரதம் = அவ்ரதம்
2. அ + ருசி = அவ்ருசி
3. இ + லஞ்சம் = இவ்லஞ்சம்
4. இ + ரேகை = இவ்ரேகை
5. அ + லாபம் = அவ்லாபம்
6. இ + யாக்கை = இவ்யாக்கை

என்பதே விடைகளாகும். இது மற்ற இடையின சொற்களுக்கும் பொருந்தும்.
ஆக, நண்பனின் கேள்விக்கு விடை "அவ்ரணத்தால்" !

இது பலருக்கு சாதாரண விஷயமாகத் தோன்றலாம். இருந்தபோதும், என்னைப் போல் சிலருக்கு இந்த பயன்பாடுகள் மறந்து போயிருக்கக் கூடும். அதை இந்தக் கட்டுரை மூலமாக நினைவுப் படுத்தவே விரும்பினேன்.

அது மட்டுமல்லாமல், சிலர் தமிழை திருத்துவதாகவும் செம்மைப்படுத்துவதாகவும் எண்ணிக் கொண்டு, வேற்றுமொழி வார்த்தைகளைத் தமிழில் எழுதும்போது தவறான உச்சரிப்புகளைப் பரப்புகின்றனர்.

உதாரணம்,

விஷயம் = விசயம்
ஜப்பான் = சப்பான்
இராஜ ராஜ சோழன் = இராச ராச சோழன்

போன்றவை. இராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளில் கூட ஜ, ஷ, ஹ போன்ற எழுத்துக்களை உபயோகித்திருப்பதை இப்போதும் நம்மால் காண முடியும். அப்படியிருக்க, அவன் பெயரையே திருத்தும் யோக்யதையை நமக்கு யார் கொடுத்தது? தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்த்திருமுறை நூல்களை ஏடுகளில் ஏற்றிய பெருமை உடைய அவனை விடவா இவர்கள் தமிழ்ப்பற்று கொண்டவர்கள்? பல வேற்று மொழி வார்த்தைகளையும் கூட உள்வாங்கி வளர்ந்து நிற்பதால் தான் பல மொழிகள் இன்னும் புழக்கத்திலிருக்கின்றன. அதைத் தவறு என்று ஒதுக்கி விட வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், வேற்று மொழி வார்த்தைகளை தவிர்த்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாமே ஒழிய, அதை நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உச்சரிப்பது ஏற்புடையது அல்ல. அப்படிச் செய்பவர்களைத் தமிழின் நலம் விரும்பிகளாக ஏற்கவும் என் மனம் மறுக்கிறது.

ஆகையால், இது போன்ற தேவை இல்லாத ஆராய்ச்சிகளை விட்டு விட்டு இருக்கும் தமிழின்பத்தை முறையாக பிழை இல்லாமல் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே தமிழ் வாழும் என்பதே என் கருத்து.

உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்க. 
நன்றி ! 

சிறப்புத் தகவல்: 
இணையத்தில் மேலும் பல தமிழ்த் தகவல்களைப் பகிர விக்கிபீடியா கொடுக்கும் ஓர் அறிய வாய்ப்பு:
விக்கிப்பீடியா: 2013 கட்டுரைப் போட்டி - 30,000/- இந்திய ரூபாய் பரிசு!


குறளோசை