Showing posts with label குறுங்கவிதை. Show all posts
Showing posts with label குறுங்கவிதை. Show all posts

Saturday, March 21, 2015

இழப்பு

நெருக்கமானவர்களின் மரணத்தை விட
நம்மை அதிகம் பாதிக்கிறது
அவர்களின் அலைப்பேசி எண்ணும்
ஃ பேஸ்புக் கணக்கும்..!!

Tuesday, October 30, 2012

முற்போக்குச் சிந்தனை

"அது கடவுள் இல்லை, கல்"
என்ற தலைவனின்
சிலைக்கு மாலை அணிவித்து
கோஷமிட்டான்
பகுத்தறிவுவாதத் தொண்டன் !

Friday, October 19, 2012

தூவானம்

உன் மேனியை தழுவ
மேகங்கள் செய்யும்
 நீர்ப்பூக்கள் அர்ச்சனை !

Wednesday, October 3, 2012

வானிலை அறிக்கை

கடக ரேகை
மகர ரேகை
பூமத்திய ரேகை
- பூமிக்கு
ஆரூடம் சொல்கிறது
வானிலை ஆய்வு மையம் !

Monday, September 24, 2012

தள்ளாமை

உதிர்ந்து விழுந்த சருகைப் பார்த்து சிரித்தன
கிளையில் புதிதாய் முளைத்த இலைகள்
நாமும் ஓர் நாள் உதிர்வோம்
என்று அறியாமல் !

Tuesday, February 14, 2012

நேசம்

என் மனதில் விழுந்த
அத்தனை கீறல்களையும் தாண்டி
அழகாய் மிளிர்கிறது
உன் விழிகள் வரைந்த
காதல் !

Friday, February 3, 2012

ஒழுங்கின்மை கோட்பாடு

உன் இமை படபடக்கும்போதெல்லாம்
புயலடிக்கிறது என் இதயத்தில்.
இதற்கு பெயர் தான்
"பட்டாம்பூச்சி" விளைவோ ?

Tuesday, August 30, 2011

வியப்பு

இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
எப்படி பார்த்தாலும்
விடை தெரியாமல்
வியக்க வைக்கிறது
பிரம்மன் எழுதிய உன்
'குறுக்கு' எழுத்து !

Saturday, April 30, 2011

ஒரு தலைக் காதல்

"இல்லை" என்ற உன் சொல்லை
ஜீரணிக்க முடியாதோ என்ற பயத்தில்
விழுங்கிவிடுகிறேன் என் காதல் வார்த்தைகளை !

Saturday, April 23, 2011

சூசகம்..

"கடமை தவறியது உன் விரல்கள்
அதையும் நிறைவேற்றியது உன் விழிகள் !"
என்று நீ சொன்ன பிறகு தான் உணர்ந்தேன்,
மலர்க் கொய்வது விரல்களின் கடமையோ ?
- காலம் கடந்த ஞானம்

முத்தம்

இதழ்கள் சண்டையிடும்
இனிமையான யுத்தம் !

புறக்கணிப்பு

கோழைக்கு கொடுக்கப்பட்ட
தண்டனை,
வீரனுக்கு கொடுக்கப்பட்ட
ஊக்க மருந்து!

Tuesday, April 19, 2011

புரட்சி

"நூறு இளைஞர்களைத் தாருங்கள்,
வலிமையான பாரதத்தை உருவாக்குகிறேன் !"
- விவேகானந்தர்
இதோ இருக்கிறோம் ஆயிரக்கணக்கில்..
தேடுகிறோம் ஒரு விவேகானந்தரை !! 

காதல்

கரைக்கும் அலைக்கும் உள்ள தொடர்பு.
வரும்.. ஆனா வராது !

கோடை

பூமித்தாய்க்குக் காய்ச்சல்
அவள் மூச்சுக்காற்று
அனலாய் வீசுகிறதோ ?

பேதமை

பாட்டி சொன்ன கதை:
"கௌரவர்கள் நூறு பேர்"
எண்ணிப் பார்க்க
குழந்தை கையில்
விரல்கள் இல்லை !

Monday, April 18, 2011

அடை மழை

உறவாடினோம்
சிரித்தோம்
அழுகிறோம்
- இப்படிக்கு மேகம்

Sunday, April 17, 2011

ஊழல்

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி!
எத்தனை பூஜ்ஜியம் என்று தெரியவில்லை
பூஜ்ஜியம் கண்டுபிடித்த இந்தியனுக்கு !!

ஒளிச்சிதறல்

காற்றில்லா வெட்ட வெளிக்கு
கதிரவன் பூசிய நீலச் சாயம்
- வானம்

Friday, April 15, 2011

ஏமாற்றம்..

நீ என்னைத் தொடுவாய் என்று
ஐந்து வருடம் காத்திருந்தேன் - ஆனால்
இன்றும் நீ வரவில்லை !
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

குறளோசை