Wednesday, February 22, 2023

போர்க்களம் மாறலாம் - 7. உதவிக் கரம்

 6. கெட்ட நிமித்தம்

7.     உதவிக் கரம்

பொழுது விடிந்து கொண்டிருந்தது. சூரியனின் செங்கதிர்கள் கீழ்வானிலிருந்துப் பரவத் தொடங்கியிருந்தது. சலசலத்து ஓடிக்கொண்டிருந்த சோமமுகி நதியின் அலையோட்டம் சூரிய ஒளியின் பிரதிபலிப்பில் தங்கப் பிரவாகமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. மறுபுறம் கீழ்த்திசையின் ஒளிபட்டு செம்பரிகுன்று அந்தத் தங்க அட்டிகையில் பதித்த மாணிக்கம் போல் மின்னியது. நதிக்கரையின் ஒரு புறம் சிலர் சூரியனுக்கு வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். மீனவர்கள் ஆற்றில் வலை வீசிக் காத்திருந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் சிறுவர்களோ ஆற்றில் தாவிக் குதித்தும் நீச்சலடித்தும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இளம்பெண்டிர் அழகான வர்ணம் பூசிய மண்பானைகளில் துணியைக் கட்டி நதி நீரை வடிகட்டி நிரப்பி எடுத்துச் சென்றனர். இதையெல்லாம் படித்துறை ஓரமாக இருந்த மண்டபத்தில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். அவன் வேறு யாருமல்ல. நம் உருத்திரன் தான்.

 

"ஆஹா!! காவிரித் தாயின் மடியிலே வீற்றிருக்கும் சோழவள நாட்டின் அழகிற்கு இந்த செம்பவளநாடு சற்றும் குறைந்தது இல்லை. இந்த சோமமுகி நதியும் அதே மலையரசனின் புதல்விகளுள் ஒருத்தியல்லவா? அதுவும் இந்த செம்பரிக் குன்று நாம் கேள்விப்பட்டதைப் போல் பயமுறுத்துவதாக ஒன்றும் இல்லையே. இவ்வளவு அழகான ஜொலிக்கும் ரத்தினம் போன்ற மலையைக் கண்குளிர ரசிக்காமல் இந்த மக்கள் பயப்படுவது சற்று ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது!", என்று ஏதேதோ எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தான். அந்த மலை உச்சியை தான் ஏறக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

 அப்பொழுது திடீரென்று "ஐயோ.. யாராவது காப்பாற்றுங்கள்.. உதவி உதவி..", என்று ஒரு பெண்மணி அலறினாள். சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் குதித்தான் உருத்திரன். நீரில் மூழ்கி கைகளால் துழாவித் தேடினான். யாரும் சிக்கவில்லை. நதியின் வேகமும் ஆழமும் அவனை எங்கோ இழுத்துச் செல்வது போலிருந்தது. இதற்கு மேல் நீரில் தாக்குபிடிக்கமுடியாது என்றுணர்ந்து எதிர்நீச்சல் போட்டு கரை வந்து சேர்ந்தான். அங்கே கூச்சலிட்ட பெண்ணிடம் படபடப்புடன் வந்து நின்று, "மன்னித்து விடுங்கள் அம்மா. என்னால் யாரையும் கண்டுபிடிக்க இயலவில்லை. விழுந்தது யார்? பரிசல்காரர்களைக் கொண்டு தேடலாம் வாருங்கள்.." என்றான். அவனை மேலும் கீழுமாகக் கோபமாய்ப் பார்த்துவிட்டு, "ஏனப்பா, யாரைத் தேடப் போகிறாய்? நீர் நிரப்பப் பானைக் கொண்டுவந்தேன். அது கை நழுவி ஆற்றில் விழுந்தது. அதை யாராவது எடுத்துத் தரும்படி உதவிக் கேட்டேன். அதற்குள் நீ மண்டபத்திலிருந்து ஆற்றில் மிதந்த பானை மேல் குதித்து அதை உடைத்து விட்டாய். என் பானைக்கு நீதான் பொறுப்பு.!", என்று அவனைப் பிடித்துக் கொண்டாள்.

"இது என்னடா வம்பாய்ப் போனது. ஆபத்துக்கு உதவ எண்ணியது ஒரு குற்றமா?", என்று அவன் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் கலகலவென சிரிப்பொலி கேட்டது. அது அவனுக்கு பரிச்சயமான ஒலி தான். அங்கே படித்துறையின் மேலே நின்றுகொண்டிருந்தது நம் கோமளவல்லியே தான். அங்கு நடந்த அனைத்தையும் பார்த்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டிருந்தாள். "அடடா, இவள் முன் அவமானப் படுவதே நமக்கு வேலையாய்ப்போய்விட்டது..", என்று தலையில் அடித்துக் கொண்டான் உருத்திரன். "ம்.. என் பானைக்கு பதில் சொல்..!", என்று மிரட்டினாள் அந்தப் பெண்மணி. "உங்கள் பானையின் விலை என்ன சொல்லுங்கள். கொடுத்துவிடுகிறேன்..", என்றான் உருத்திரன். "இல்லை, எனக்கு பானை தான் வேண்டும்..", என்றால் அவள். "சரி, நான் சென்று உங்களுக்கு ஒரு பானை வாங்கி வருகிறேன்..", என்று எத்தனித்தவனிடம், "உன்னை விட்டால் ஓடிவிடுவாய், இங்கேயே என் பானைக்கு ஒரு வழி சொல்", என்றாள். "இப்படி ஒரு பைத்தியக்கரியிடம் வந்து சிக்கிக் கொண்டோமே..", என்று எண்ணியவாறு மேலே கோமளவல்லியைப் பார்த்தான். அவள் சிரித்துக் கொண்டே அருகில் இறங்கி வந்தாள். "இந்தாருங்கள் அம்மா. என் பானையை எடுத்துக் கொள்ளுங்கள். பாவம் அவர் சித்த பிரமைப் பிடித்தவர் போல இருக்கிறது. அவரை விட்டு விடுங்கள்..", என்றாள். "ஓ.. பைத்தியமா இவன்.. வாட்ட சாட்டமாக இருக்கிறான்.. பாவம்..", என்று சொல்லிவிட்டு கோமளவல்லியின் பானையை வாங்கிச் சென்றால் அந்த பெண்மணி. உண்மையிலேயே தனக்கு சித்த பிரமைப் பிடித்துவிட்டதோ என்று சந்தேகம் வந்துவிட்டது உருத்திரனுக்கு. அவள் சென்ற பிறகு மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தாள் கோமளவல்லி.

 "தக்க சமயத்தில் உதவியதற்கு நன்றி தேவி..", என்றான் உருத்திரன். "உங்கள் நன்றி யாருக்கு வேண்டும் நீச்சல் வீரரே..? என்னுடன் வந்து வேறு பானை வாங்கிக் கொடுங்கள்..", என்று அழைத்தாள். "இதோ வருகிறேன்..", என்று அவளோடுப் பேசிக்கொண்டே நடக்கலானான். அப்போது தான் அவனுக்கு சியாமளவல்லியின் நினைவு வந்தது. அந்த ஓவியத்தின் அழகு அவன் கண்களை விட்டு மறையவே இல்லை. "உங்கள் தமக்கையார் நலமா?", என்று ஆரம்பித்தான். "அவளுக்கென்ன?! நன்றாகத்தான் இருப்பாள். நானும் அவளைப் பார்த்து வெகுநாட்கள் ஆயிற்று", என்றாள்.  "ஏன் அப்படி தேவி? ", என்றான் உருத்திரன். "அவளை நிரந்தரமாக அரண்மனையில் தங்கச் சொல்லி அரசர் உத்தரவு. அரசர் அனுமதியின்றி அரண்மனைக்குள் அவ்வளவு எளிதில் யாரும் அவளை சந்தித்து விட முடியாது", என்றாள் கோமளவல்லி. "கார்க்கோடகர் அரசருக்கு நெருக்கமானவராயிற்றே..? உங்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடு?", என்றான் உருத்திரன். "உண்மை தான், ஆனால் அதைத் தன் சுய ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை அவர் எப்பொழுதும் விரும்ப மாட்டார். நானும் அப்படியே..", என்று பேசிக் கொண்டே குயவர்க் குடில் அருகில் வந்து சேர்ந்தார்கள். அங்கே புதிதாக ஒரு பானையை வாங்கி அவளிடம் கொடுத்தான் உருத்திரன். ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பியது போல் தோன்றியது அவனுக்கு.

பானையை வாங்கிக் கொண்டு ஏதும் சொல்லாமல் விறுவிறுவென்று நடந்தாள் அவள். "தேவி, சற்று நில்லுங்கள். உங்கள் மனை எங்கு இருக்கிறது என்று நான் அறிந்து கொள்ளலாமா?", என்றான். சட்டென்று திரும்பியவள், "அந்தப் பானை கேட்டப் பெண்மணியிடம் விசாரித்து சொல்லவா?", என்று கலகலவென்று சிரித்து விட்டு சிட்டெனப் பறந்தாள். "ஆஹா.. ! இவளைப் பின் தொடர்வது பெரும் ஆபத்தில் கொண்டுவிடும் போலிருக்கிறதே", என்று எண்ணியவனாய் திரும்பிப் போனான்.

Sunday, January 29, 2023

போர்க்களம் மாறலாம் - 6. கெட்ட நிமித்தம்

5. கார்க்கோடகன் 

6.     கெட்ட நிமித்தம்

செவ்வேள் மாடத்தின் வாயிலில் மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. மழுவாள் கொடியோடு வீரர்கள் புடை சூழ வெண்குதிரைகள் பூட்டியத் தேர் ஒன்று வந்துகொண்டிருந்தது. மக்கள் அதன் மேல் பூமாரிப் பொழிந்தனர். அதில் திரண்ட தோள்களும், திண்ணிய மார்பும், முறுக்கிய மீசையும், அடர்ந்த தாடியும், ஒளிரும் கண்களும் கொண்ட ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தான் செம்பவள நாட்டின் அரசர் பவளமான் எழினி என்று நாம் சொல்லித் தெரியத் தேவையில்லை. அவர் அருகில் சற்று குள்ளமான தேகமும் பெருமை தோய்ந்த முகமுமாய் அமர்ந்திருந்தது சிங்காபுரிச் செம்மல் என்றழைக்கப்பட்ட தீரனார். செம்பவள தேசத்தின் தலைமை அமைச்சர். வடக்கே மலைக்குன்றுகளாலும், தெற்கே காடுகளாலும் சூழப்பட்டப் பெரும் முல்லை நிலத்துப் பகுதியை அதன் செழுமை அறிந்து குறிஞ்சி, முல்லை, மருத நிலப் பகுதிகள் அடங்கிய வளமான பூமியாக மாற்றியப் பெருமை பவளமான் குலத்தவரின் முன்னோர்களைச் சாரும் என்றால், சிங்காபுரி என்னும் வியத்தகு நகரை வடிவமைத்துக் கொடுத்த பெருமை தீரனாரின் முன்னோரையேச் சாரும். காலம் காலமாக பவளமான் அரசர்களின் விசுவாசிகள். அதுமட்டுமின்றி ஐம்பெருங்குழுவின் தலைமைப் பொறுப்பும் தீரனாரிடமே இருந்தது.

கோயிலுக்கு வெளியே இத்தனை பரபரப்புக்கும் காரணம் என்ன என்றறிய உருத்திரனுக்கு பேராவல். "ஐயா, நான் என்ன நடக்கிறது என்று அறிந்து வருகிறேன்", என்று வெளியே செல்ல எத்தனித்தான் உருத்திரன். "எங்கள் மாமன்னர் வந்திருக்கிறாரப்பா. இளவேனிற்காலம் தொடங்கி விட்டதல்லவா? இந்த ஊரே இனி விழாக்கோலம் பூண இருக்கிறது. இம்மாதத்தின் முழு நிலவு நாளன்று இங்கே பூரணைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளைக் காண அமைச்சர் பெருமான் தீரனார்  வருவது வழக்கம் தான். ஆனால் இன்று அரசரும் வந்திருக்கிறார் என்றால் முக்கியமான காரணமாகத்தான் இருக்க வேண்டும். எப்படியும் இங்கு தான் வருவார். சற்று பொறு", என்றார் கார்க்கோடகன்.

கோயில் அருகில் வந்து தேர் நின்றதும் எழுந்த மன்னர், "வாழ்க செவ்வேள் ! வாழ்க செம்பவள நாடு!!" என்று முழங்கினார். "வாழ்க வாழ்க !!", என்று மக்கள் அதை எதிரொலித்தனர். அனைவரையும் வணங்கிவிட்டு தேரிலிருந்து இறங்கிய மன்னர் கம்பீரமாக செவ்வேள் மாடத்திற்குள் நுழைந்துக் கருவறையை நோக்கி நடந்தார். கோயில் முற்றத்தைப் பார்வையிட்டுக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்தார் தீரனார். கருவறையில் அவருக்கென சிறப்பு தீபாராதனைக் காட்டப்பட்டது. தீப ஒளியில் அழகாய் மிளிர்ந்தக் கந்தனைக் கண்டதும் மெய்யுருகி வேண்டினார் அரசர் பவளமான் எழினி. கூடவே தீரனாரும். அருகில் பணிவோடு நின்றிருந்தனர் கார்க்கோடகன், உருத்திரன், கோமளவல்லி ஆகிய மூவரும். பூசை முடிந்ததும், "பவளநாடுடைய கோவே வாழ்க ! சிங்காபுரிச் செம்மல் வாழ்க !!" என்று கைகூப்பி வணங்கினார் கார்க்கோடகன். அதுவரை கோயிலுக்குள் யாரையும் கவனியாத மன்னர், "யாரது கார்க்கோடகரா? உங்களைக் கண்டதில் பெருமகிழ்ச்சி என்று அருகில் வந்தார்". "இந்த ஏழையின் மேல் உங்கள் பார்வை பட்டது என் யோகம். ஆனால் உங்களை என் கண்களால் காண முடியாமல் போனது நான் செய்த பாவம்", என்றார் கார்க்கோடகன். "அது இந்த தேசத்திற்கு நேர்ந்த தீவினை. இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறது என்பதை இந்த வேலனும், கோட்டை காக்கும் கொற்றவையுமே அறிவார்கள்", என்று கவலை தோய்ந்தவராய் பதிலளித்தார் அரசர்.

அரசரின் இந்தக் கவலைக்குக் காரணம், சில மாதங்களுக்கு முன் அரண்மனைக்குள் இருந்த காவல் மரம் யாரோ கயவர்களால் வெட்டப்பட்டது தான். தலைநகரத்தின் காவல் மரம் வெட்டப்பட்டால் அந்த நாடே அழியும் என்று நம்பப்பட்டது அந்த நாட்களில். அத்தனைக் காவல்களையும் மீறி இதை யார் செய்திருக்கக் கூடும் என்று யாருக்கும் விளங்கவில்லை. அதன் பின், ஒருநாள் தலைமைச் சிற்பி கார்க்கோடகன் மின்னல் தாக்கி கண்களை இழந்தார். இப்பொழுதோ, செம்பவள நாட்டின் சேனாதிபதி பெயர் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் உள்ளார். இவையெல்லாம் நாடு முழுவதும் பெரும் அபசகுனமாகப் பார்க்கப்பட்டது. இதனிடையில் பூரணைத் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டுமென்ற கவலையும் அரசரை சேர்ந்து கொண்டது.

அவரை திசை திருப்பும் பொருட்டு, "கார்க்கோடகரே, கோயிலின் மராமரத்து பணிகளில் கவனம் செலுத்துங்கள். இந்த முறை பூரணைத் திருவிழாவின்போது ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான பொற்காசுகளை அரண்மனை கணக்காயரிடமிருந்து பெற்றுக் கொள்ளவும்.", என்று கூறிவிட்டு, "அரசே, நாளவை நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது", என்று அரசரிடம் கூறினார் தீரனார். உணர்ச்சிப் பிரவாகங்களுக்கு இடமில்லை தீரனாரிடம். காரியமே கண்ணாகக் கொண்டவர். "ஆம் தீரனாரே. தக்க சமயத்தில் நினைவூட்டினீர். நாங்கள் சென்று வருகிறோம்", என்று வணங்கி நின்றவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டனர் அரசரும் அமைச்சரும். அவரைப் பின் தொடர்ந்து சென்றனர் மூவரும். தேரில் ஏறிய மன்னர், ஒரு நிமிடம் திரும்பி உருத்திரனையே உற்று நோக்கினார். அதுவரை அவனை அவர் சரியாக கவனித்ததாகக் கூடத் தெரியவில்லை உருத்திரனுக்கு. இப்பொழுதோ அவனையே உற்று நோக்கவும், சிறிது குழப்பமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வோடு வணங்கி நின்றான் உருத்திரன். சிறு புன்முறுவலோடு திரும்பி தேரோட்டியிடம், "செல்லலாம்" , என்றார் அரசர். குதிரைகள் கனைக்கத் தேர் நகரத் தொடங்கியதும், "மாமன்னர் பவளமான் எழினி வாழ்க ! அமைச்சர் தீரனார் வாழ்க !!", என்ற முழக்கங்கள் மீண்டும் எழும்பி அடங்கின.

மன்னர் பார்த்த பார்வையின் பொருள் என்ன? இவ்வளவு மக்கள் கூட்டத்தின் நடுவே தன்னை மட்டும் அப்படி பார்க்க வேண்டிய காரணம் என்ன? இருந்தும் நம்மைப் பற்றி ஏதும் கேட்காமல் போனதன் நோக்கம் என்ன? இது நமக்கு நன்மை பயக்குமா? இப்படி பல கேள்விகளோடு நின்றிருந்தான் உருத்திரன்.

7. உதவிக் கரம்

Friday, January 27, 2023

போர்க்களம் மாறலாம் - 5. கார்க்கோடகன்

 4. தூரிகை ஏந்திய காரிகை

5. கார்க்கோடகன்

உருத்திரனிடம் பேசிக்கொண்டிருந்த கோமளவல்லி, தூரிகையை கீழே வைத்து விட்டு தனக்கு அழைப்பு வந்தத் திசையை நோக்கித் திரும்பி, "இதோ வருகிறேன் மாமா", என்று  விறுவிறுவென நடந்தாள். உருத்திரனும் அவளைப் பின் தொடர்ந்தான். அங்கே ஒரு முதியவர் கைகளில் மாலை தொடுத்து வைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தார். அந்த மாலையில் இருந்த மலர்களின் நறுமணம் அந்தக் கோயில் முழுவதும் நிரம்பியிருந்தது. பொன்னிறமான அந்த மலர்களைக் கண்டு உருத்திரனின் மனம் பூரித்தது. ஆம், அவை கடம்ப மலர்கள். "கடம்பமர் நெடுவேள்" என்று பெரும்பாணாற்றுப்படைப் போற்றும் வேலனுக்கு ஏற்ற மலர்கள். அதுமட்டுமல்ல, அவை இளவேனிற்காலத்திற்கே உரிய மலர்கள்.

"அதற்குள் மாலை தொடுத்து விட்டீர்களா மாமா? கொடுங்கள், நான் சென்று இதைக் உண்ணாழியில் கொடுத்துவிட்டு வருகிறேன்" என்றாள் கோமளவல்லி. "இதோ!. " என்று அவளிடம் அந்த மாலையைக் கொடுத்து, "நானும் வருகிறேன் அம்மா..", என்று சொல்வதற்குள், அதைப் பெற்றுக்கொண்டு துள்ளி ஓடினால் கோமளவல்லி. "விளையாட்டுப் பெண்".. என்று சொல்லிக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தார் அந்த முதியவர். தானொருவன் அருகில் நிற்பதை இந்த முதியவர் சிறிதும் கண்டுகொள்ளவில்லையே என்று எண்ணிய உருத்திரன் இன்னொன்றையும் கவனித்தான், அவர் மெல்ல கோலூன்றித் தட்டுத் தடுமாறி நடந்து சென்றார். "அடடா, இந்த முதியவருக்கு கண் பார்வை இல்லை போலிருக்கிறதே", என்று உணர்ந்த உருத்திரன் தான் சென்று உதவலாம் என்று எண்ணினான். அருகில் சென்று, "ஐயா, என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள், நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்" என்றான். "யாரப்பா அது?" என்றார் முதியவர். "நான் தான்", என்றான் உருத்திரன். "நான் தான் என்றால்?" என்று கேட்ட முதியவரிடம், "என் பெயர் உருத்திரன். நான் ஒரு வழிப்போக்கன். உங்களுக்கு கண்பார்வை சரியில்லை என்று தோன்றியது. அதனால் உதவலாம் என்று வந்தேன்", என்றான். "நீ கூறுவது உண்மை தான். இருந்தாலும் இந்தக் கோயிலுக்குள் எனக்கு யார் உதவியும் தேவைப்படுவதில்லை. இந்த செவ்வேள் மாடத்தின் ஒவ்வொரு கல்லும் எனக்கு அத்துப்படி. ஆனால் உதவலாம் என்று வந்த உன்னை பொருட்படுத்தாமல் செல்ல எனக்கு மனமில்லை. ஆகையால் பரவாயில்லை, உன் கையைக் கொடு", என்று துழாவிய முதியவர், நீட்டிய அவன் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.

"ஏனப்பா, நீ வழிப்போக்கன் என்கிறாய்? ஆனால் உன்னைப் பார்த்தால் பெரியப் போர்வீரனைப் போலல்லவா இருக்கிறாய்?", என்றார் முதியவர். ஆச்சர்யமும் குழப்பமும் அடைந்தவனாய், "பார்வையில்லாதத் தாங்கள் எப்படி என்னைக் கண்டீர்கள்?" என்று கேட்டான். "உன்னை புறக்கண்களால் காண இயலவில்லை என்றபோதும், என் அகக்கண்ணால் உருவகப்படுத்தினேன். என் பெயர்க் கார்க்கோடகன். நான் ஒரு சிற்பி. இந்த ஆலயத்தின் சிற்பங்களில் பல என் கைவண்ணத்தால் ஆனவை. உன் கைகளின் அளவையும் வலிமையையும் வைத்து உன் உருவத்தை என்னால் கணிக்க முடியும்", என்று பேசிக்கொண்டே இருவரும் கருவறை அருகில் வந்து சேர்ந்தார்கள். பூசைத் தொடங்குவதைக் குறிக்கக் கோயில் மணி ஒலித்ததும்,  

"உலக முவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்

கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி

யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை

மறுவில் கற்பின் வாணுதல் கணவன்.."

என்று சூரியனின் ஒளியானது உலகெங்கும் பரவுவது போல் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாத தொலைவிடத்தில் கூட முருகப்பெருமானின்  அருட்பார்வை பாய்வதாய்ப் பொருள்படும் முருகாற்றுப்படைப் பாடலை குரலெடுத்துப் பாடினார் அந்த முதியவர். அங்கே கோமளவல்லியும் இருந்தாள். அவர் பாடி முடித்தபின், "இந்த மாவீரர் எப்படி உங்களோடு ஒட்டிக் கொண்டார் மாமா?" என்றாள். "ஏனம்மா? இவர் தான் என்னை தடுமாறாமல் இங்கே அழைத்து வர உதவினார். உனக்கு இவரை ஏற்கனவே தெரியுமா?", எனக் கேட்டார் முதியவர். "இவரா உங்களைத் தடுமாறாமல் அழைத்து வந்தார்? உங்களுக்கு இன்று நல்ல நேரம் தான்?" என்று மீண்டும் கலகலவென்று சிரித்தாள். "அவள் அப்படித்தான் தம்பி. வாய்த்துடுக்குக்காரி. நீ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லையே" என்றார் கார்க்கோடகன்.

"ஐயா தாங்கள் கூறுவது போல் தான் என் தந்தையும் கூறுவார். நீ ஒரு போர்வீரனை ஒத்தவன் என்பார். ஆனால் நான் கருங்கொல்லர் குலத்தவன். அரசர்க்கும் ஏனைய சேனைக்கும் வேல்வடித்துக் கொடுத்தல் என் குலத் தொழில். என் தந்தை சோழவளநாட்டின் கொற்றரைகள் ஒன்றின் தலைமைக் கொல்லர். எங்கள் கொல்லுலைக்குத் தேவையான பொருட்களும் கருவிகளும் தேடி பல ஊர்களுக்கு பயணம் செல்வது என் வழக்கம். செம்பவள நாட்டின் பெருமை கேட்டு இந்த சிங்காபுரியின் கொல்லர்கள் பல புதுவித ஆயுதங்களையும், கருவிகளையும் கையாள்வதாய் அறிந்தேன். அவற்றை கற்றறியலாம் என்றே இங்கே வந்து சேர்ந்தேன். என்னைப்பற்றி சொல்ல பெரிதாய் வேறொன்றும் இல்லை. ஆனால் இந்த செவ்வேள் மாடம் என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது. இந்தச் சிறு நகரத்து கற்றூண்களும், சிற்பங்களும், சித்திரங்களும் கண்டு மனம் பூரித்தேன். இவற்றில் உங்கள் கைவண்ணம் இருக்குமாயின், உங்களைச் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்", என்று சொல்லிக் கொண்டிருக்கையில், குதிரைகளின் குளம்படி சத்தமும், "பார் போற்றும் பவளமான் எழினி வாழ்க !! சிங்காபுரிச் செம்மல் வாழ்க, வாழ்க !!", என்ற முழக்கங்களும் ஓங்கி ஒலித்தன.

-       தொடரும்

6. கெட்ட நிமித்தம்

Tuesday, January 24, 2023

போர்க்களம் மாறலாம் - 4. தூரிகை ஏந்திய காரிகை

3. வளையல் சிரித்தது

4.     தூரிகை ஏந்திய காரிகை

தன் கண்ணையேத் தன்னால் நம்ப முடியவில்லை உருத்திரனுக்கு. தான் சுவற்றில் கண்டப் பெண் தன்னைத் தானே நடனம் ஆடுவது போல் சித்திரம் தீட்டிக்கொண்டிருந்தாள். இப்போது வேறொரு சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு. சுவற்றில் கண்டது சித்திரமானது போல் நேரில் காண்பது விஸ்வகர்மன் வடித்த கற்சிலையோ என்று. ஒரு புறம் ஆச்சர்யத்தில் மூழ்கினாலும் மறுபுறம் அவன் மனம் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்தது. அது போக இப்படி ஒரு பெண்ணை முதன் முதலில் சந்திக்க நேரும்போது கால் இடறியா கீழே விழ வேண்டும் என்ற வெட்கம் வேறு அவனுக்கு.

"ஐயா கீழே விழுந்த மாவீரரே, கொஞ்சம்  தரையை பார்த்து நடக்ககூடாதா?" என்று சிரித்தவாறே அவள் கேட்டது காதில் விழுந்த போதும் ஒரு அசட்டு சிரிப்போடு அந்த பெண்ணின் முக லட்சணங்களை ரசிப்பதிலேயே அவன் மனம் லயித்து போயிருந்தது. அவன் முகத்தின் முன் தன் கைகளை ஆட்டி, "ஐயா, ஏனப்பா, உன்னிடம் தான் பேசுகிறேன். நான் பேசுவது உன் காதில் விழவில்லையா, அல்லது உனக்கு கண்களும் தெரியாதா?" என்று அந்தப் பெண் கேட்டதும் சட்டென்று நினைவு திரும்பியவனாய், "மன்னிக்கவும் தேவி. உங்கள் அழகைக் கண்டு மயங்கி.." என்று சொல்ல வந்தவனிடம், "என்ன சொன்னாய்?" என்று சற்று கோபமாகக் கேட்டாள் அந்தப் பெண். "இல்லை.. உங்கள் ஓவியத்தின் அழகைக் கண்டு ரசித்துக் கொண்டே நடந்தபொழுது இங்கே ஏதோ காலில் இடறியதால் தவறி விழுந்து விட்டேன்", என்று பதிலளித்தான் உருத்திரன். உடனே கலகலவென சிரித்துவிட்டு, "தவறில்லை. என் ஓவியம் என்னை விட அழகு தான். நல்ல வேளை, சிறிது தள்ளி விழுந்திருந்தால் என் ஓவியத்துக்கு தேவையான சிவப்பு வண்ணப் பூச்சு உன் நெத்தியிலிருந்தே கிடைத்திருக்கும்", என்று மீண்டும் சிரித்தாள்.

எட்டிப் பார்த்த உருத்திரனுக்கு அப்போது தான் தெரிந்தது அந்த மண்டபத்தின் விளிம்பில் அவன் நின்று கொண்டிருந்தது. அந்தப் பெண் சொன்னது போல், சிறிது தள்ளி விழுந்திருந்தால் அந்த மண்டபத்தின் படிக்கற்களில் உருண்டு விழுந்து அவன் மண்டை உடைபட்டிருக்கும். அவன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, "உனக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமா?" என்றாள் அந்தப் பெண். அவளைத் திரும்பிப் பார்த்து "என்ன?" என்பது போல் தலையை ஆட்டினான் உருத்திரன். "காதை அருகில் கொண்டு வா", என்பது போல் சைகை செய்தாள் அவள். தயங்கியவாறே அவள் அருகில் சென்று செவி சாய்த்தான். "அந்த ஓவியத்தில் இருப்பது நான் இல்லை. அது என் தமக்கை. அவள் தான் இந்த நகரத்தின் அரசவை நடன மாது. நாங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள். இப்போது சொல் யார் மிக அழகு என்று?", எனப் புருவங்களை அசைத்துக் கேட்டாள். இது என்னடா புதுக் குழப்பம் என்று தோன்றியது உருத்திரனுக்கு. இவள் சொல்வது உண்மையா? அல்லது நம்மிடம் விளையாடுகிராளா? முன்பின் தெரியாத ஆடவனிடம் ஒரு பெண் இவ்வளவு கலகலப்பாகப் பேசுவதும் உரிமையோடு ஒருமையில் அழைப்பதும் அவனுக்கு அதிசயமாகத்தான் இருந்தது. இருந்தபோதும் அது அவனுக்கு பிடித்திருந்தது.

அந்த உரையாடலை மேலும் தொடர விரும்பி, "அடடா நான் ஏமாந்து போனேனே. மிகப்பெரிய ரகசியம் தான் தேவி. இருந்தபோதும் உங்கள் இருவரையும் ஒருசேர நேரில் கண்டால் தானே உங்கள் கேள்விக்கு என்னால் பதிலளிக்க இயலும்", என்றான் உருத்திரன். "அதுவும் சரி தான். ஆனால் அதற்கு நீ இளவேனிற் திருவிழா வரும்வரைக் காத்திருக்க வேண்டும். உனக்கு அந்த குடுப்பினை இருக்கிறதா என்று பிறகு பார்ப்போம். இப்போது என் பணியை செய்ய விடுகிறாயா?", என்று நகைத்துக் கொண்டே ஓவியம் வரைவதை மீண்டும் தொடர்ந்தாள். தானாக வலிய வந்து தன்னிடம் பேசிவிட்டு என்னவோ தான் தான் அவளின் பணியை நிறுத்தியது போல் பேசுகிறாளே இந்தப் பெண். ஆனாலும் அவள் வெகுளித்தனத்தையும் அவன் ரசிக்கத்தான் செய்தான். அது போக, அந்தப் பெண் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த நடன அழகியைச் சந்தித்து விட வேண்டும் என்ற பேராவல் பிறந்தது அவனுக்கு. தொடர்ந்து அவன், "அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றே நம்புகிறேன் தேவி. உங்கள் தமக்கையின் பெயர் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?", என்று கேட்டான். "ம்.. அவள் பெயர் சியாமளவல்லி", என்று பதில் வந்தது. "அழகான பெயர். அப்படியே, தங்கள் பெயர்..?", என்று கேட்டு முடிப்பதற்குள், "அம்மா கோமளவல்லி. எங்கே இருக்கிறாய் அம்மா?", என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

- தொடரும்

5. கார்க்கோடகன்

Sunday, January 22, 2023

போர்க்களம் மாறலாம் - 3. வளையல் சிரித்தது

2. செம்பரிக் குன்று

3. வளையல் சிரித்தது

ஒரு ஊர்ப் பருந்தின் மேலமர்ந்து மலை உச்சியிலிருந்து பறந்து சென்றோமானால் எங்கும் வயல்வெளிகளும், தென்னை மரங்களும், வேங்கை மரக்காடுகளும் நிறைந்து ஒரு பச்சைப் பட்டு உடுத்திய அழகியைப் போல் காட்சியளிக்கும் செம்பவள நாட்டின் தலைநகரமான சிங்காபுரி. அதோ அந்த அழகி அணிந்திருக்கும் முத்துச் சரம் போல் தெரிகிறதே, அது என்ன?அது தான் வேங்கி நாட்டில் எங்கோ பிறந்து, மலைகளிலிருந்து விழுந்து,  பல தடைகளைக் கடந்து செம்பவள நாட்டையே வளம்கொழிக்கச் செய்துகொண்டிருந்த சோமமுகி நதியோ? பொங்கும் நதியலைகள் பாற்கடலைப் போலல்லவா இருக்கிறது? இதை பாலாறு என்றும் அழைக்கலாமோ?

 இத்தனை அழகிய நகரத்திற்கு மேலும் மெருகூட்டின சோமமுகி நதியால் இயற்கை அகழி அமையப் பெற்ற சிங்காபுரியின் கோட்டை மதில்களும், கோட்டையினுள் அமைந்த மாட மாளிகைகளும். இந்த சிங்காபுரிக் கோட்டைக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது செம்பரிக்குன்றின் அடிவாரத்தில் அமைந்த செவ்வேள் மாடம். அது முருகப்பெருமானுக்கு எழுப்பப்பட்டிருந்தக் கற்றளி. அந்த கோயிலின் பிரம்மாண்டத்தையும் கலைநயத்தையும் கண்டு மெய்மறந்தவனாய் கோயிலின் பிரதான வாயில் அருகில் இருந்த மேற்கூரையை அண்ணாந்து பார்த்து நடந்து கொண்டிருந்தான் வாலிபன் ஒருவன். இவனை பின் தொடருங்கள். இந்தப் பயணத்தில் நமக்கான வழிகாட்டி இவன் தான். யார் இந்த வாலிபன்? வேறு யார்? இவன் தான் நம் கதாநாயகன்  உருத்திரன்.

 மேலே பார்த்து வியந்து நடந்த உருத்திரன், கல்முற்றத்தின் தூண்கள் ஒன்றில் தன்னை அறியாமல் முட்டிக் கொண்டான். சட்டென்று சுதாரித்து நின்றவன் தனது வலது புறம் திரும்பினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. அந்த மண்டபத்தின் முடிவிலிருந்த சுவற்றில் ஓர் ஓவியம். அதுவும் ஒரு பெண்ணின் ஓவியம். காண்பவர் கண்களை சட்டெனக் கவரும் அந்த ஓவியத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று அவன் மனம் அவனைத் தூண்டியது. அருகில் செல்லச் செல்ல அந்த ஓவியத்தில் இருந்த இளம்பெண் நவரசமும் ததும்ப நாட்டியம் ஆடுவது போல் தோன்றியது அவனுக்கு. "இது என்ன மாயம்? நாம் இதுவரைக் கண்டிராத தெய்வீகக் கலைப் பொருந்திய முகம்? யார் இவள்? நாம் கதைகளிலே கேட்ட காந்தர்வ குல கன்னியோ? தேவலோகத்து மேனகையோ? தேவ கன்னியர் எல்லாம் சுவற்றில் கூடவா குடியிருப்பார்கள்? ச்சீ.. ச்சீ.. இது என்ன திடீரென நமக்கு பிடித்த பிரமை நோய்?", என்று என்னவெல்லாமோ யோசித்துக் கொண்டு கண்ணிமைக்காமல் அந்த ஓவியத்தை நோக்கி நடந்தான். நெருங்க நெருங்க அந்தப் பெண்ணின் அழகும் வசீகரமும் அவன் மனதை கொள்ளை கொண்டது. "இது வெறும் ஓவியம் அல்லவா? இவ்வளவு அழகை கற்பனை செய்து ஒருவனால் வரைய முடியுமோ? இதை வரைந்து வைத்த ஓவியன் இவளை எங்கு கண்டானோ? அப்படி கண்டிருந்தால் அவன் எவ்வளவு பாக்கியம் அடைந்தவன்?", என்று சிந்தித்துக் கொண்டே நடந்தவன் அங்கே தரையில் கிடந்த பலகை ஒன்றில் இடறிக் கீழே விழுந்தான். உடனே "கலகல" வென ஒரு சிரிப்பொலி கேட்டது.

 சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவனுக்கு தூண் மறைவிலிருந்து வெளிப்பட்ட கைகளில் இருந்த அழகிய வேலைப்பாடமைந்த வளையல்கள் தான் கண்களில் பட்டன. "நாம் கேட்டது சிரிப்பொலியா, இந்த வளையல்கள் குலுங்கிய சத்தமா? அல்லது இந்த ஊரில் வளையல்கள் தான் சிரிக்குமா?", என்று ஏதேதோ எண்ணிக் கொண்டு எழுந்து பார்த்தவனுக்கு ஒரு மாபெரும் ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. ஆம் உங்கள் யூகம் சரி தான். அவன் ஓவியத்தில் பார்த்த பேரழகி இதோ அவன் கண் முன்னால். ஆனால் அவள் நடனமாடவில்லை. அவள் கைகளில் தூரிகை இருந்தது.

- தொடரும்

4. தூரிகை ஏந்திய காரிகை

Saturday, January 21, 2023

போர்க்களம் மாறலாம் - 2. செம்பரிக் குன்று

1. புழுதி பறந்தது

2.     செம்பரிக் குன்று

 

பரந்த பாரத தேசத்தில் அசோகச் சக்ரவர்த்தி கோலோச்சிய காலத்தில், தமிழ் கூறும் நல்லுலகு சங்க கால சேர, சோழ, பாண்டியர்களாலும், சத்ய புத்திரர்களாலும் ஆளப்பட்ட தென்புலத்து பெருநிலமாக விளங்கியது. தமிழகத்தின் வடகோடி எல்லையில் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் சோழர் ஆளுகைக்குட்பட்ட சிறிய தேசம் தான் செம்பவள நாடு. செம்பவள நாட்டிற்கும் மௌரியப் பேரரசின் நிலப்பரப்பிற்கும் இடையிலான எல்லையை வரையறுக்கும் மலைத்தொடரின் பெருங்குன்றாய் எருமை போன்ற வடிவில் உயர்ந்து நின்றது இந்த செம்பரிக் குன்று. "பரி என்றால் குதிரை அல்லவா?" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

 

இந்தக் குன்றுக்கு தெற்கில் அமைந்த செம்பவள நாடு ஒரு செம்மண் பூமி. "தானுவந்து பொய்க்காமல் மாரி பொழிதலும் வேருவந்து நிற்காமல் வளம் கொழித்தலும்.." என்று பாடல் பெற்ற நிலவளமும் நீர்வளமும் கொண்ட நாடு. இதற்கு எதிர்மறையாக இந்த மலைப்பகுதிக்கு அப்பால் உள்ள நிலப்பகுதி ஒரு வறண்ட பீடபூமியாக விளங்கியது. பல காலமாக எருமை வடிவிலான இந்த குன்றின் மேல் எமதர்மன் அமர்ந்து ஆட்சி செய்வதாகவும் அவன் பார்வை வடக்கு நோக்கி இருப்பதால் தான் அந்த நிலம் வறண்டு போனதாகவும் செம்பவள நாட்டு மக்கள் நம்பி வந்தனர். எமனின் பார்வை தங்கள் பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும் தக்ஷிணாயன காலத்தின் ஆரம்பமான ஆடி மாதத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்றி படையலிட்டு வணங்கி வந்தனர் ஒரு சாரார். அதனால் இந்தக் குன்று வெகுகாலம் எமனேறும் பரிக்குன்று (எமன்+ஏறும்+பரி என்பது எமதர்மனின் வாகனமான எருமையைக் குறித்தது) என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் செம்மண் மற்றும் சிவப்பு நிற பாறைகளால் சூழப்பட்டிருந்ததால் காலப்போக்கில் அது செம்பரிக் குன்றாய் மாறிப்போனது.

 

சிறு தேசமாயினும் இந்த செம்பவள நாடு சுற்றியிருந்த பல தேசத்து அரசர்களின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்கு காரணம், சோழர் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பகுதி ஆயினும், தனித்து இயங்கும் சுதந்திரத்தையும் செல்வாக்கையும் பெற்ற நாடாகத் திகழ்ந்தது. தென் மேற்கில் சத்ய புத்திரர்களோடும், மேற்கில் கேரள புத்திர தேசம் என்று அழைக்கப்பட்ட சேர நாட்டோடும், வடக்கே மௌரிய ஆட்சியின் கீழமைந்த பல தேசங்களோடும் வணிக உறவு இருந்தது செம்பவள நாட்டிற்கு. குறிப்பாக, பீடபூமிக்கு வடக்கே இருந்த பல குறுநில மன்னர்களின் படையெடுப்பிலிருந்தும், வறண்ட தேசத்து கொள்ளையர்களின் ஊடுருவல்களிலிருந்தும் அந்த நாட்டை காப்பாற்றி வந்தது இந்த செம்பரிக் குன்று.

 

இந்தக் குன்றின் வடகிழக்கு பகுதியில் மலை உச்சியிலிருந்து உள்ளே இறங்கும் ஓர் இருண்ட குகைப்பாதை இருந்தது. இந்தப் பாதை எங்கே செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது. உள்ளே இறங்க முயற்சித்தவர்கள் யாரும் மீண்டு வரவில்லை என்றும், உள்ளே சென்ற மறுநொடி தீப்பந்தங்கள் தாமாக அணைந்து விடுவதாகவும் ஒரு பேச்சு இருந்தது. வீராதி வீரர்கள் பலர் மாண்டு போனதாகக் கூறப்பட்டது. மேய்ச்சலுக்கு செல்லும் கால் நடைகளும் காணாமல் போவதால் தீபம் ஏற்றும் நாளைத்தவிர மற்ற நாட்களில் மக்கள் அந்த மலை உச்சிக்கு செல்லவே பயந்தனர். ஆகையால் அந்தப் பாதையை பலரும் பாதாள உலகத்தின் திறவுகோல் என்றும், நரகத்தின் வாசற்படி என்றும் அழைத்து வந்தனர். அந்த மர்மத்தை உடைக்கும் ஒருவன் பிறக்காமலா போய் விடுவான்? என்று செம்பவள நாட்டு மக்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தனர்.

- தொடரும்

3. வளையல் சிரித்தது

Friday, January 20, 2023

போர்க்களம் மாறலாம் - 1. புழுதி பறந்தது

இதோ இன்னொரு புதிய முயற்சி. ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்ற எனது வெகு நாள் வேட்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கே தொடக்கப்புள்ளி வைக்கிறேன். தவறுகளிலிருந்தும் விமர்சனங்களிலிருந்தும் தான் சிறந்த கற்றலும் கலையும் வசப்படும் என்ற நம்பிக்கை உடையவன் நான். எனவே, குறை நிறைகளை வெளிப்படையாக பின்னூட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும். வாசிப்பிற்கு நன்றி.

- சுகன் ராஜ் பாரதி 

1.     புழுதி பறந்தது

 

வேலும் வாளும் உரசும் சத்தம் விண்ணைப் பிளந்து கொண்டிருந்தது. எங்கு காணினும் மறவர் கூட்டம் மனித வலிமையின் வரம்புகளை மீறி ஆயுதங்களை செலுத்திக் கொண்டிருந்தது. விற்களிலிருந்து புறப்பட்ட பாணங்கள் புற்றீசலைப் போல் புறப்பட்டுச் சென்று இருபுறமும் வீரர்களை பதம் பார்த்துக் கொண்டிருந்தன. இந்த பாணங்களின் வீச்சில் சிதைந்து போனது மனித உயிர்கள் மட்டுமல்ல. வேல் தாங்கிய வீரர்களைக் கூட புழுவைப் போல் நசுக்கி தும்பிக்கையில் பந்தாடிக் கொண்டிருந்த யானைகளையும், குண்டும் குழியும் தாண்டி, தாக்க வரும் வீரர்களினூடே லாவகமாய் புகுந்து ஓடி தன்மேல் அமர்ந்து ஈட்டி வீசும் வீரனைப் பாதுகாத்து வந்த புரவிகளையும் துளைத்துச் சென்றது விண்ணிலிருந்து பெய்த கணை மழை.

 

ஆம். அது ஒரு போர்க்களம். வீரம் செறிந்த பூமி. இன்னுயிரை துச்சமாக மதித்து தாய் நாட்டிற்காகப் போரிட்டுக் கொண்டிருந்த படைகளின் சங்கமம். "மெய்வேல் பறியா நகும்" என்ற பொய்யாமொழிப் புலவன் வாக்கைப் போல் தன் மேல் பாய்ந்த வேலைப் பிடுங்கி போரிடும் மாவீரர்களைக் கண்ட பூமி. கொட்டும் குருதி காயும் முன்னே வெட்டும் கரங்கள் பாயும் களமாக அது இருந்தது. மார்பில் விழுப்புண் பெறவேண்டும் என்று கவசங்களைத் துறந்து வாள்வீசிக் கொண்டிருந்தக் கூட்டம் அது.

 

இருபுறமும் சளைக்காத படைகள். ராட்சதத் தேர்ச்சக்கரங்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலாட்படை வீரர்களை எண்ண நமக்கு நேரம் போதாது. இருந்தும் அந்த களத்தில் வெற்றிடம் இல்லை. படைகள் தாங்கியிருந்த கொடிகள் இல்லையேல் எதிரிகளைக்கூட இனம் காண முடியாத அளவிற்கு வீரர்களால் நிரம்பி வழிந்த நிலப்பரப்பு.

 

தேர்களும் குதிரைகளும் யானைகளும் காலடிகளும் ஓடிய ஓட்டத்தில் எதிர் நின்ற செம்பரிக் குன்றுக்கும் மேலெழும்பி அங்கே புழுதி பறந்தது. எதற்கு இந்த போர்? அந்தப் புழுதிக்கும் நடுவே ஓர் கருப்பு குதிரையில் எந்தப் பிடிமானமும் இன்றி இரு கைகளாலும் வேல் சுழற்றும் இந்த இளங்காளை யார்? அவன் நெற்றியில் வழிவது வியர்வையா குருதியா என்பதறியாமல் எதையும் பொருட்படுத்தாமல் எதை நோக்கி முன்னேறிச் செல்கிறான்? இவன் செல்லும் திசையின் எதிரில் இரு தந்தம் கொண்ட முரட்டு யானையின் மீதமர்ந்து போரிடும் மாவீரர் யார்? அவர் கண் அசைவிற்கு கிளர்ந்து போரிடும் படைகளின் தளபதியோ? அந்த யானையை நோக்கி ஆக்ரோஷமாய் விரையும் குதிரை வீரனின் நோக்கம் என்ன? 

 

- தொடரும்

2. செம்பரிக் குன்று

குறளோசை