Tuesday, January 24, 2023

போர்க்களம் மாறலாம் - 4. தூரிகை ஏந்திய காரிகை

3. வளையல் சிரித்தது

4.     தூரிகை ஏந்திய காரிகை

தன் கண்ணையேத் தன்னால் நம்ப முடியவில்லை உருத்திரனுக்கு. தான் சுவற்றில் கண்டப் பெண் தன்னைத் தானே நடனம் ஆடுவது போல் சித்திரம் தீட்டிக்கொண்டிருந்தாள். இப்போது வேறொரு சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு. சுவற்றில் கண்டது சித்திரமானது போல் நேரில் காண்பது விஸ்வகர்மன் வடித்த கற்சிலையோ என்று. ஒரு புறம் ஆச்சர்யத்தில் மூழ்கினாலும் மறுபுறம் அவன் மனம் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்தது. அது போக இப்படி ஒரு பெண்ணை முதன் முதலில் சந்திக்க நேரும்போது கால் இடறியா கீழே விழ வேண்டும் என்ற வெட்கம் வேறு அவனுக்கு.

"ஐயா கீழே விழுந்த மாவீரரே, கொஞ்சம்  தரையை பார்த்து நடக்ககூடாதா?" என்று சிரித்தவாறே அவள் கேட்டது காதில் விழுந்த போதும் ஒரு அசட்டு சிரிப்போடு அந்த பெண்ணின் முக லட்சணங்களை ரசிப்பதிலேயே அவன் மனம் லயித்து போயிருந்தது. அவன் முகத்தின் முன் தன் கைகளை ஆட்டி, "ஐயா, ஏனப்பா, உன்னிடம் தான் பேசுகிறேன். நான் பேசுவது உன் காதில் விழவில்லையா, அல்லது உனக்கு கண்களும் தெரியாதா?" என்று அந்தப் பெண் கேட்டதும் சட்டென்று நினைவு திரும்பியவனாய், "மன்னிக்கவும் தேவி. உங்கள் அழகைக் கண்டு மயங்கி.." என்று சொல்ல வந்தவனிடம், "என்ன சொன்னாய்?" என்று சற்று கோபமாகக் கேட்டாள் அந்தப் பெண். "இல்லை.. உங்கள் ஓவியத்தின் அழகைக் கண்டு ரசித்துக் கொண்டே நடந்தபொழுது இங்கே ஏதோ காலில் இடறியதால் தவறி விழுந்து விட்டேன்", என்று பதிலளித்தான் உருத்திரன். உடனே கலகலவென சிரித்துவிட்டு, "தவறில்லை. என் ஓவியம் என்னை விட அழகு தான். நல்ல வேளை, சிறிது தள்ளி விழுந்திருந்தால் என் ஓவியத்துக்கு தேவையான சிவப்பு வண்ணப் பூச்சு உன் நெத்தியிலிருந்தே கிடைத்திருக்கும்", என்று மீண்டும் சிரித்தாள்.

எட்டிப் பார்த்த உருத்திரனுக்கு அப்போது தான் தெரிந்தது அந்த மண்டபத்தின் விளிம்பில் அவன் நின்று கொண்டிருந்தது. அந்தப் பெண் சொன்னது போல், சிறிது தள்ளி விழுந்திருந்தால் அந்த மண்டபத்தின் படிக்கற்களில் உருண்டு விழுந்து அவன் மண்டை உடைபட்டிருக்கும். அவன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, "உனக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமா?" என்றாள் அந்தப் பெண். அவளைத் திரும்பிப் பார்த்து "என்ன?" என்பது போல் தலையை ஆட்டினான் உருத்திரன். "காதை அருகில் கொண்டு வா", என்பது போல் சைகை செய்தாள் அவள். தயங்கியவாறே அவள் அருகில் சென்று செவி சாய்த்தான். "அந்த ஓவியத்தில் இருப்பது நான் இல்லை. அது என் தமக்கை. அவள் தான் இந்த நகரத்தின் அரசவை நடன மாது. நாங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள். இப்போது சொல் யார் மிக அழகு என்று?", எனப் புருவங்களை அசைத்துக் கேட்டாள். இது என்னடா புதுக் குழப்பம் என்று தோன்றியது உருத்திரனுக்கு. இவள் சொல்வது உண்மையா? அல்லது நம்மிடம் விளையாடுகிராளா? முன்பின் தெரியாத ஆடவனிடம் ஒரு பெண் இவ்வளவு கலகலப்பாகப் பேசுவதும் உரிமையோடு ஒருமையில் அழைப்பதும் அவனுக்கு அதிசயமாகத்தான் இருந்தது. இருந்தபோதும் அது அவனுக்கு பிடித்திருந்தது.

அந்த உரையாடலை மேலும் தொடர விரும்பி, "அடடா நான் ஏமாந்து போனேனே. மிகப்பெரிய ரகசியம் தான் தேவி. இருந்தபோதும் உங்கள் இருவரையும் ஒருசேர நேரில் கண்டால் தானே உங்கள் கேள்விக்கு என்னால் பதிலளிக்க இயலும்", என்றான் உருத்திரன். "அதுவும் சரி தான். ஆனால் அதற்கு நீ இளவேனிற் திருவிழா வரும்வரைக் காத்திருக்க வேண்டும். உனக்கு அந்த குடுப்பினை இருக்கிறதா என்று பிறகு பார்ப்போம். இப்போது என் பணியை செய்ய விடுகிறாயா?", என்று நகைத்துக் கொண்டே ஓவியம் வரைவதை மீண்டும் தொடர்ந்தாள். தானாக வலிய வந்து தன்னிடம் பேசிவிட்டு என்னவோ தான் தான் அவளின் பணியை நிறுத்தியது போல் பேசுகிறாளே இந்தப் பெண். ஆனாலும் அவள் வெகுளித்தனத்தையும் அவன் ரசிக்கத்தான் செய்தான். அது போக, அந்தப் பெண் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த நடன அழகியைச் சந்தித்து விட வேண்டும் என்ற பேராவல் பிறந்தது அவனுக்கு. தொடர்ந்து அவன், "அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றே நம்புகிறேன் தேவி. உங்கள் தமக்கையின் பெயர் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?", என்று கேட்டான். "ம்.. அவள் பெயர் சியாமளவல்லி", என்று பதில் வந்தது. "அழகான பெயர். அப்படியே, தங்கள் பெயர்..?", என்று கேட்டு முடிப்பதற்குள், "அம்மா கோமளவல்லி. எங்கே இருக்கிறாய் அம்மா?", என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

- தொடரும்

5. கார்க்கோடகன்

No comments:

குறளோசை