Sunday, January 22, 2023

போர்க்களம் மாறலாம் - 3. வளையல் சிரித்தது

2. செம்பரிக் குன்று

3. வளையல் சிரித்தது

ஒரு ஊர்ப் பருந்தின் மேலமர்ந்து மலை உச்சியிலிருந்து பறந்து சென்றோமானால் எங்கும் வயல்வெளிகளும், தென்னை மரங்களும், வேங்கை மரக்காடுகளும் நிறைந்து ஒரு பச்சைப் பட்டு உடுத்திய அழகியைப் போல் காட்சியளிக்கும் செம்பவள நாட்டின் தலைநகரமான சிங்காபுரி. அதோ அந்த அழகி அணிந்திருக்கும் முத்துச் சரம் போல் தெரிகிறதே, அது என்ன?அது தான் வேங்கி நாட்டில் எங்கோ பிறந்து, மலைகளிலிருந்து விழுந்து,  பல தடைகளைக் கடந்து செம்பவள நாட்டையே வளம்கொழிக்கச் செய்துகொண்டிருந்த சோமமுகி நதியோ? பொங்கும் நதியலைகள் பாற்கடலைப் போலல்லவா இருக்கிறது? இதை பாலாறு என்றும் அழைக்கலாமோ?

 இத்தனை அழகிய நகரத்திற்கு மேலும் மெருகூட்டின சோமமுகி நதியால் இயற்கை அகழி அமையப் பெற்ற சிங்காபுரியின் கோட்டை மதில்களும், கோட்டையினுள் அமைந்த மாட மாளிகைகளும். இந்த சிங்காபுரிக் கோட்டைக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது செம்பரிக்குன்றின் அடிவாரத்தில் அமைந்த செவ்வேள் மாடம். அது முருகப்பெருமானுக்கு எழுப்பப்பட்டிருந்தக் கற்றளி. அந்த கோயிலின் பிரம்மாண்டத்தையும் கலைநயத்தையும் கண்டு மெய்மறந்தவனாய் கோயிலின் பிரதான வாயில் அருகில் இருந்த மேற்கூரையை அண்ணாந்து பார்த்து நடந்து கொண்டிருந்தான் வாலிபன் ஒருவன். இவனை பின் தொடருங்கள். இந்தப் பயணத்தில் நமக்கான வழிகாட்டி இவன் தான். யார் இந்த வாலிபன்? வேறு யார்? இவன் தான் நம் கதாநாயகன்  உருத்திரன்.

 மேலே பார்த்து வியந்து நடந்த உருத்திரன், கல்முற்றத்தின் தூண்கள் ஒன்றில் தன்னை அறியாமல் முட்டிக் கொண்டான். சட்டென்று சுதாரித்து நின்றவன் தனது வலது புறம் திரும்பினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. அந்த மண்டபத்தின் முடிவிலிருந்த சுவற்றில் ஓர் ஓவியம். அதுவும் ஒரு பெண்ணின் ஓவியம். காண்பவர் கண்களை சட்டெனக் கவரும் அந்த ஓவியத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று அவன் மனம் அவனைத் தூண்டியது. அருகில் செல்லச் செல்ல அந்த ஓவியத்தில் இருந்த இளம்பெண் நவரசமும் ததும்ப நாட்டியம் ஆடுவது போல் தோன்றியது அவனுக்கு. "இது என்ன மாயம்? நாம் இதுவரைக் கண்டிராத தெய்வீகக் கலைப் பொருந்திய முகம்? யார் இவள்? நாம் கதைகளிலே கேட்ட காந்தர்வ குல கன்னியோ? தேவலோகத்து மேனகையோ? தேவ கன்னியர் எல்லாம் சுவற்றில் கூடவா குடியிருப்பார்கள்? ச்சீ.. ச்சீ.. இது என்ன திடீரென நமக்கு பிடித்த பிரமை நோய்?", என்று என்னவெல்லாமோ யோசித்துக் கொண்டு கண்ணிமைக்காமல் அந்த ஓவியத்தை நோக்கி நடந்தான். நெருங்க நெருங்க அந்தப் பெண்ணின் அழகும் வசீகரமும் அவன் மனதை கொள்ளை கொண்டது. "இது வெறும் ஓவியம் அல்லவா? இவ்வளவு அழகை கற்பனை செய்து ஒருவனால் வரைய முடியுமோ? இதை வரைந்து வைத்த ஓவியன் இவளை எங்கு கண்டானோ? அப்படி கண்டிருந்தால் அவன் எவ்வளவு பாக்கியம் அடைந்தவன்?", என்று சிந்தித்துக் கொண்டே நடந்தவன் அங்கே தரையில் கிடந்த பலகை ஒன்றில் இடறிக் கீழே விழுந்தான். உடனே "கலகல" வென ஒரு சிரிப்பொலி கேட்டது.

 சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவனுக்கு தூண் மறைவிலிருந்து வெளிப்பட்ட கைகளில் இருந்த அழகிய வேலைப்பாடமைந்த வளையல்கள் தான் கண்களில் பட்டன. "நாம் கேட்டது சிரிப்பொலியா, இந்த வளையல்கள் குலுங்கிய சத்தமா? அல்லது இந்த ஊரில் வளையல்கள் தான் சிரிக்குமா?", என்று ஏதேதோ எண்ணிக் கொண்டு எழுந்து பார்த்தவனுக்கு ஒரு மாபெரும் ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. ஆம் உங்கள் யூகம் சரி தான். அவன் ஓவியத்தில் பார்த்த பேரழகி இதோ அவன் கண் முன்னால். ஆனால் அவள் நடனமாடவில்லை. அவள் கைகளில் தூரிகை இருந்தது.

- தொடரும்

4. தூரிகை ஏந்திய காரிகை

No comments:

குறளோசை