Friday, January 27, 2023

போர்க்களம் மாறலாம் - 5. கார்க்கோடகன்

 4. தூரிகை ஏந்திய காரிகை

5. கார்க்கோடகன்

உருத்திரனிடம் பேசிக்கொண்டிருந்த கோமளவல்லி, தூரிகையை கீழே வைத்து விட்டு தனக்கு அழைப்பு வந்தத் திசையை நோக்கித் திரும்பி, "இதோ வருகிறேன் மாமா", என்று  விறுவிறுவென நடந்தாள். உருத்திரனும் அவளைப் பின் தொடர்ந்தான். அங்கே ஒரு முதியவர் கைகளில் மாலை தொடுத்து வைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தார். அந்த மாலையில் இருந்த மலர்களின் நறுமணம் அந்தக் கோயில் முழுவதும் நிரம்பியிருந்தது. பொன்னிறமான அந்த மலர்களைக் கண்டு உருத்திரனின் மனம் பூரித்தது. ஆம், அவை கடம்ப மலர்கள். "கடம்பமர் நெடுவேள்" என்று பெரும்பாணாற்றுப்படைப் போற்றும் வேலனுக்கு ஏற்ற மலர்கள். அதுமட்டுமல்ல, அவை இளவேனிற்காலத்திற்கே உரிய மலர்கள்.

"அதற்குள் மாலை தொடுத்து விட்டீர்களா மாமா? கொடுங்கள், நான் சென்று இதைக் உண்ணாழியில் கொடுத்துவிட்டு வருகிறேன்" என்றாள் கோமளவல்லி. "இதோ!. " என்று அவளிடம் அந்த மாலையைக் கொடுத்து, "நானும் வருகிறேன் அம்மா..", என்று சொல்வதற்குள், அதைப் பெற்றுக்கொண்டு துள்ளி ஓடினால் கோமளவல்லி. "விளையாட்டுப் பெண்".. என்று சொல்லிக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தார் அந்த முதியவர். தானொருவன் அருகில் நிற்பதை இந்த முதியவர் சிறிதும் கண்டுகொள்ளவில்லையே என்று எண்ணிய உருத்திரன் இன்னொன்றையும் கவனித்தான், அவர் மெல்ல கோலூன்றித் தட்டுத் தடுமாறி நடந்து சென்றார். "அடடா, இந்த முதியவருக்கு கண் பார்வை இல்லை போலிருக்கிறதே", என்று உணர்ந்த உருத்திரன் தான் சென்று உதவலாம் என்று எண்ணினான். அருகில் சென்று, "ஐயா, என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள், நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்" என்றான். "யாரப்பா அது?" என்றார் முதியவர். "நான் தான்", என்றான் உருத்திரன். "நான் தான் என்றால்?" என்று கேட்ட முதியவரிடம், "என் பெயர் உருத்திரன். நான் ஒரு வழிப்போக்கன். உங்களுக்கு கண்பார்வை சரியில்லை என்று தோன்றியது. அதனால் உதவலாம் என்று வந்தேன்", என்றான். "நீ கூறுவது உண்மை தான். இருந்தாலும் இந்தக் கோயிலுக்குள் எனக்கு யார் உதவியும் தேவைப்படுவதில்லை. இந்த செவ்வேள் மாடத்தின் ஒவ்வொரு கல்லும் எனக்கு அத்துப்படி. ஆனால் உதவலாம் என்று வந்த உன்னை பொருட்படுத்தாமல் செல்ல எனக்கு மனமில்லை. ஆகையால் பரவாயில்லை, உன் கையைக் கொடு", என்று துழாவிய முதியவர், நீட்டிய அவன் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.

"ஏனப்பா, நீ வழிப்போக்கன் என்கிறாய்? ஆனால் உன்னைப் பார்த்தால் பெரியப் போர்வீரனைப் போலல்லவா இருக்கிறாய்?", என்றார் முதியவர். ஆச்சர்யமும் குழப்பமும் அடைந்தவனாய், "பார்வையில்லாதத் தாங்கள் எப்படி என்னைக் கண்டீர்கள்?" என்று கேட்டான். "உன்னை புறக்கண்களால் காண இயலவில்லை என்றபோதும், என் அகக்கண்ணால் உருவகப்படுத்தினேன். என் பெயர்க் கார்க்கோடகன். நான் ஒரு சிற்பி. இந்த ஆலயத்தின் சிற்பங்களில் பல என் கைவண்ணத்தால் ஆனவை. உன் கைகளின் அளவையும் வலிமையையும் வைத்து உன் உருவத்தை என்னால் கணிக்க முடியும்", என்று பேசிக்கொண்டே இருவரும் கருவறை அருகில் வந்து சேர்ந்தார்கள். பூசைத் தொடங்குவதைக் குறிக்கக் கோயில் மணி ஒலித்ததும்,  

"உலக முவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்

கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி

யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை

மறுவில் கற்பின் வாணுதல் கணவன்.."

என்று சூரியனின் ஒளியானது உலகெங்கும் பரவுவது போல் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாத தொலைவிடத்தில் கூட முருகப்பெருமானின்  அருட்பார்வை பாய்வதாய்ப் பொருள்படும் முருகாற்றுப்படைப் பாடலை குரலெடுத்துப் பாடினார் அந்த முதியவர். அங்கே கோமளவல்லியும் இருந்தாள். அவர் பாடி முடித்தபின், "இந்த மாவீரர் எப்படி உங்களோடு ஒட்டிக் கொண்டார் மாமா?" என்றாள். "ஏனம்மா? இவர் தான் என்னை தடுமாறாமல் இங்கே அழைத்து வர உதவினார். உனக்கு இவரை ஏற்கனவே தெரியுமா?", எனக் கேட்டார் முதியவர். "இவரா உங்களைத் தடுமாறாமல் அழைத்து வந்தார்? உங்களுக்கு இன்று நல்ல நேரம் தான்?" என்று மீண்டும் கலகலவென்று சிரித்தாள். "அவள் அப்படித்தான் தம்பி. வாய்த்துடுக்குக்காரி. நீ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லையே" என்றார் கார்க்கோடகன்.

"ஐயா தாங்கள் கூறுவது போல் தான் என் தந்தையும் கூறுவார். நீ ஒரு போர்வீரனை ஒத்தவன் என்பார். ஆனால் நான் கருங்கொல்லர் குலத்தவன். அரசர்க்கும் ஏனைய சேனைக்கும் வேல்வடித்துக் கொடுத்தல் என் குலத் தொழில். என் தந்தை சோழவளநாட்டின் கொற்றரைகள் ஒன்றின் தலைமைக் கொல்லர். எங்கள் கொல்லுலைக்குத் தேவையான பொருட்களும் கருவிகளும் தேடி பல ஊர்களுக்கு பயணம் செல்வது என் வழக்கம். செம்பவள நாட்டின் பெருமை கேட்டு இந்த சிங்காபுரியின் கொல்லர்கள் பல புதுவித ஆயுதங்களையும், கருவிகளையும் கையாள்வதாய் அறிந்தேன். அவற்றை கற்றறியலாம் என்றே இங்கே வந்து சேர்ந்தேன். என்னைப்பற்றி சொல்ல பெரிதாய் வேறொன்றும் இல்லை. ஆனால் இந்த செவ்வேள் மாடம் என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது. இந்தச் சிறு நகரத்து கற்றூண்களும், சிற்பங்களும், சித்திரங்களும் கண்டு மனம் பூரித்தேன். இவற்றில் உங்கள் கைவண்ணம் இருக்குமாயின், உங்களைச் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்", என்று சொல்லிக் கொண்டிருக்கையில், குதிரைகளின் குளம்படி சத்தமும், "பார் போற்றும் பவளமான் எழினி வாழ்க !! சிங்காபுரிச் செம்மல் வாழ்க, வாழ்க !!", என்ற முழக்கங்களும் ஓங்கி ஒலித்தன.

-       தொடரும்

6. கெட்ட நிமித்தம்

No comments:

குறளோசை