Sunday, May 16, 2021

குரு சிஷ்யன் - 1

 ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒரு துறவி தன் சீடர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.


துறவி சொன்னார், "வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமென்றால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஆனால் அதை உங்களுக்காக செய்யுங்கள். உங்கள் மனதார செய்தீர்கள் என்றால் நீங்கள் எதையும் எதிர்பார்த்து வருத்தமடைய மாட்டீர்கள்."


அப்போது ஒரு சீடனுக்கு சந்தேகம் எழுந்தது. "குருவே, நான் பலருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியிருக்கிறேன். ஆனாலும் அவர்கள் நன்றி மறந்து எனக்கு துரோகம் செய்கிறார்கள். நான் எப்படி வருத்தமடையாமல் இருப்பது?" என்று வினவினான்.


துறவி புன்முறுவலுடன், "நீ அவர்களிடத்தில் நன்றியை எதிர்பார்கிறாய். அதனால் தான் வருத்தமடைகிறாய்" என்றார்.


சீடனுக்கு அந்த பதில் திருப்தியாக இல்லை. அவன் மீண்டும், "செய்த உதவிக்கு நன்றியைக் கூட எதிர்பார்க்காமல் எப்படி உதவுவது குருவே?" என்றான்.


துறவியோ, "சீடனே, நீ தேன் கூட்டிலிருந்து தேனெடுத்து உண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்.


அதற்கு சீடன், "ஓ, சாப்பிட்டிருக்கிறேனே!" என்றான்.


துறவி கேட்டார், "அந்த தேனை உனக்கு சேகரித்துத் தந்த தேனீக்கு என்றாவது நீ நன்றி தெரிவித்திருக்கிறாயா?"


சீடன், "இல்லை குருவே" என்றான்.


"அது போல தான். நீ நன்றி காட்டவில்ல்லை என்று தேனீ வருத்தப்படுவதில்லை. அது தன் வேலையான தேன் சேகரிப்பதை தொடர்ந்து செய்கிறது. அதே போல் நீயும் எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்." என்று பொறுமையாக பதிலளித்தார்.


ஏதோ புரிந்தது போல் தலையை ஆட்டிவிட்டு அமர்ந்த சீடன், மறுபடியும் எழுந்தான். "குருவே, அப்படியே பார்த்தாலும் தேனீ ஒன்றும் தேனை சுயமாக உருவாக்கி நமக்கு தருவதில்லையே. அதுவே மலர்களிடமிருந்து தேனை களவாடித்தானே சேர்க்கிறது. நான் ஏன் தேனீக்கு நன்றி சொல்ல வேண்டும்?" என்றான்.


அதற்கு துறவி சற்றும் சலனப்படாமல், "முற்றிலும் உண்மை. அதே போல் நீ மற்றவர்க்கு கொடுத்து உதவிய எதையுமே நீ பிறக்கும்போது இந்த உலகிற்கு கொண்டு வரவில்லை. நீயும் அதை களவாடித்தானே சேர்த்திருக்கிறாய். நீ நன்றியை எதிர்பார்க்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கேட்டார்.


புரிந்தும் புரியாதவனாய், "குருவே. என் சந்தேகம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் தேன் எடுக்க முயற்சி செய்யும்போது என்னை பல தேனீக்கள் கொட்டியிருக்கின்றன. நன்றி மறந்தவர்களைக் கண்டால் எனக்கும் அப்படித்தானே கோபம் வரும். அது நியாயம் தானே?" என்று கேட்டான்.


துறவி அவனை புன்னகையோடு நோக்கினார். சீடனோ, துறவியால் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றே எண்ணினான். தான் கூறியது தான் சரி என்று ஒப்புக்கொள்வார் என்று அவனுக்கு தோன்றியது.


ஆனால் துறவியோ, "சீடனே, உன்னை தேனீக்கள் கொட்டியதாகக் கூறினாயே, அதற்கு நீ என்ன வைத்தியம் செய்தாய்?" என்றார்.


சீடனுக்கோ தன் கேள்விக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தோன்றியது. இருந்தாலும் குருவுக்கு பதிலளிக்கும் வகையில், "கொட்டிய இடத்தில் இருந்த கொடுக்கை நீக்கிவிட்டு சுண்ணாம்பு வைத்தேன். ஓரிரு நாட்களில் வலி குறைந்துவிட்டது" என்றான்.


அதற்கு துறவி, "மிகச்சிறப்பு. ஆனால் உன்னை கொட்டிய தேனீக்கு என்ன ஆனது தெரியுமா? கொடுக்கை இழந்த தேனீ அன்றே உயிர்விட்டது. அப்படித்தான் நன்றி மறந்தவர்களைக் கண்டு கோபம் கொண்டு அவர்களை புண்படுத்துவதில் நீ நேரம் செலவிட்டால், அது அவர்களுக்கு ஒரு சிறிய காயத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். ஆனால் அது உன் வாழ்க்கையையே கெடுத்துவிடும். பறந்து சென்ற மற்ற தேனீக்கள் எப்படி தன்னம்பிக்கையோடு மீண்டும் தேனை சேர்க்கிறதோ, அப்படியே நீயும் உன் வாழ்க்கையில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். தவறான மனிதர்களின் செயல்களால் சலனமுறாதே..!" என்று கூறி முடித்தார்.


சீடன் முற்றும் விளங்கியவனாய் துறவியின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

குறளோசை