Wednesday, February 22, 2023

போர்க்களம் மாறலாம் - 7. உதவிக் கரம்

 6. கெட்ட நிமித்தம்

7.     உதவிக் கரம்

பொழுது விடிந்து கொண்டிருந்தது. சூரியனின் செங்கதிர்கள் கீழ்வானிலிருந்துப் பரவத் தொடங்கியிருந்தது. சலசலத்து ஓடிக்கொண்டிருந்த சோமமுகி நதியின் அலையோட்டம் சூரிய ஒளியின் பிரதிபலிப்பில் தங்கப் பிரவாகமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. மறுபுறம் கீழ்த்திசையின் ஒளிபட்டு செம்பரிகுன்று அந்தத் தங்க அட்டிகையில் பதித்த மாணிக்கம் போல் மின்னியது. நதிக்கரையின் ஒரு புறம் சிலர் சூரியனுக்கு வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். மீனவர்கள் ஆற்றில் வலை வீசிக் காத்திருந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் சிறுவர்களோ ஆற்றில் தாவிக் குதித்தும் நீச்சலடித்தும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இளம்பெண்டிர் அழகான வர்ணம் பூசிய மண்பானைகளில் துணியைக் கட்டி நதி நீரை வடிகட்டி நிரப்பி எடுத்துச் சென்றனர். இதையெல்லாம் படித்துறை ஓரமாக இருந்த மண்டபத்தில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். அவன் வேறு யாருமல்ல. நம் உருத்திரன் தான்.

 

"ஆஹா!! காவிரித் தாயின் மடியிலே வீற்றிருக்கும் சோழவள நாட்டின் அழகிற்கு இந்த செம்பவளநாடு சற்றும் குறைந்தது இல்லை. இந்த சோமமுகி நதியும் அதே மலையரசனின் புதல்விகளுள் ஒருத்தியல்லவா? அதுவும் இந்த செம்பரிக் குன்று நாம் கேள்விப்பட்டதைப் போல் பயமுறுத்துவதாக ஒன்றும் இல்லையே. இவ்வளவு அழகான ஜொலிக்கும் ரத்தினம் போன்ற மலையைக் கண்குளிர ரசிக்காமல் இந்த மக்கள் பயப்படுவது சற்று ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது!", என்று ஏதேதோ எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தான். அந்த மலை உச்சியை தான் ஏறக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

 அப்பொழுது திடீரென்று "ஐயோ.. யாராவது காப்பாற்றுங்கள்.. உதவி உதவி..", என்று ஒரு பெண்மணி அலறினாள். சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் குதித்தான் உருத்திரன். நீரில் மூழ்கி கைகளால் துழாவித் தேடினான். யாரும் சிக்கவில்லை. நதியின் வேகமும் ஆழமும் அவனை எங்கோ இழுத்துச் செல்வது போலிருந்தது. இதற்கு மேல் நீரில் தாக்குபிடிக்கமுடியாது என்றுணர்ந்து எதிர்நீச்சல் போட்டு கரை வந்து சேர்ந்தான். அங்கே கூச்சலிட்ட பெண்ணிடம் படபடப்புடன் வந்து நின்று, "மன்னித்து விடுங்கள் அம்மா. என்னால் யாரையும் கண்டுபிடிக்க இயலவில்லை. விழுந்தது யார்? பரிசல்காரர்களைக் கொண்டு தேடலாம் வாருங்கள்.." என்றான். அவனை மேலும் கீழுமாகக் கோபமாய்ப் பார்த்துவிட்டு, "ஏனப்பா, யாரைத் தேடப் போகிறாய்? நீர் நிரப்பப் பானைக் கொண்டுவந்தேன். அது கை நழுவி ஆற்றில் விழுந்தது. அதை யாராவது எடுத்துத் தரும்படி உதவிக் கேட்டேன். அதற்குள் நீ மண்டபத்திலிருந்து ஆற்றில் மிதந்த பானை மேல் குதித்து அதை உடைத்து விட்டாய். என் பானைக்கு நீதான் பொறுப்பு.!", என்று அவனைப் பிடித்துக் கொண்டாள்.

"இது என்னடா வம்பாய்ப் போனது. ஆபத்துக்கு உதவ எண்ணியது ஒரு குற்றமா?", என்று அவன் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் கலகலவென சிரிப்பொலி கேட்டது. அது அவனுக்கு பரிச்சயமான ஒலி தான். அங்கே படித்துறையின் மேலே நின்றுகொண்டிருந்தது நம் கோமளவல்லியே தான். அங்கு நடந்த அனைத்தையும் பார்த்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டிருந்தாள். "அடடா, இவள் முன் அவமானப் படுவதே நமக்கு வேலையாய்ப்போய்விட்டது..", என்று தலையில் அடித்துக் கொண்டான் உருத்திரன். "ம்.. என் பானைக்கு பதில் சொல்..!", என்று மிரட்டினாள் அந்தப் பெண்மணி. "உங்கள் பானையின் விலை என்ன சொல்லுங்கள். கொடுத்துவிடுகிறேன்..", என்றான் உருத்திரன். "இல்லை, எனக்கு பானை தான் வேண்டும்..", என்றால் அவள். "சரி, நான் சென்று உங்களுக்கு ஒரு பானை வாங்கி வருகிறேன்..", என்று எத்தனித்தவனிடம், "உன்னை விட்டால் ஓடிவிடுவாய், இங்கேயே என் பானைக்கு ஒரு வழி சொல்", என்றாள். "இப்படி ஒரு பைத்தியக்கரியிடம் வந்து சிக்கிக் கொண்டோமே..", என்று எண்ணியவாறு மேலே கோமளவல்லியைப் பார்த்தான். அவள் சிரித்துக் கொண்டே அருகில் இறங்கி வந்தாள். "இந்தாருங்கள் அம்மா. என் பானையை எடுத்துக் கொள்ளுங்கள். பாவம் அவர் சித்த பிரமைப் பிடித்தவர் போல இருக்கிறது. அவரை விட்டு விடுங்கள்..", என்றாள். "ஓ.. பைத்தியமா இவன்.. வாட்ட சாட்டமாக இருக்கிறான்.. பாவம்..", என்று சொல்லிவிட்டு கோமளவல்லியின் பானையை வாங்கிச் சென்றால் அந்த பெண்மணி. உண்மையிலேயே தனக்கு சித்த பிரமைப் பிடித்துவிட்டதோ என்று சந்தேகம் வந்துவிட்டது உருத்திரனுக்கு. அவள் சென்ற பிறகு மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தாள் கோமளவல்லி.

 "தக்க சமயத்தில் உதவியதற்கு நன்றி தேவி..", என்றான் உருத்திரன். "உங்கள் நன்றி யாருக்கு வேண்டும் நீச்சல் வீரரே..? என்னுடன் வந்து வேறு பானை வாங்கிக் கொடுங்கள்..", என்று அழைத்தாள். "இதோ வருகிறேன்..", என்று அவளோடுப் பேசிக்கொண்டே நடக்கலானான். அப்போது தான் அவனுக்கு சியாமளவல்லியின் நினைவு வந்தது. அந்த ஓவியத்தின் அழகு அவன் கண்களை விட்டு மறையவே இல்லை. "உங்கள் தமக்கையார் நலமா?", என்று ஆரம்பித்தான். "அவளுக்கென்ன?! நன்றாகத்தான் இருப்பாள். நானும் அவளைப் பார்த்து வெகுநாட்கள் ஆயிற்று", என்றாள்.  "ஏன் அப்படி தேவி? ", என்றான் உருத்திரன். "அவளை நிரந்தரமாக அரண்மனையில் தங்கச் சொல்லி அரசர் உத்தரவு. அரசர் அனுமதியின்றி அரண்மனைக்குள் அவ்வளவு எளிதில் யாரும் அவளை சந்தித்து விட முடியாது", என்றாள் கோமளவல்லி. "கார்க்கோடகர் அரசருக்கு நெருக்கமானவராயிற்றே..? உங்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடு?", என்றான் உருத்திரன். "உண்மை தான், ஆனால் அதைத் தன் சுய ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை அவர் எப்பொழுதும் விரும்ப மாட்டார். நானும் அப்படியே..", என்று பேசிக் கொண்டே குயவர்க் குடில் அருகில் வந்து சேர்ந்தார்கள். அங்கே புதிதாக ஒரு பானையை வாங்கி அவளிடம் கொடுத்தான் உருத்திரன். ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பியது போல் தோன்றியது அவனுக்கு.

பானையை வாங்கிக் கொண்டு ஏதும் சொல்லாமல் விறுவிறுவென்று நடந்தாள் அவள். "தேவி, சற்று நில்லுங்கள். உங்கள் மனை எங்கு இருக்கிறது என்று நான் அறிந்து கொள்ளலாமா?", என்றான். சட்டென்று திரும்பியவள், "அந்தப் பானை கேட்டப் பெண்மணியிடம் விசாரித்து சொல்லவா?", என்று கலகலவென்று சிரித்து விட்டு சிட்டெனப் பறந்தாள். "ஆஹா.. ! இவளைப் பின் தொடர்வது பெரும் ஆபத்தில் கொண்டுவிடும் போலிருக்கிறதே", என்று எண்ணியவனாய் திரும்பிப் போனான்.

No comments:

குறளோசை