Showing posts with label நான் பேச நினைப்பதெல்லாம். Show all posts
Showing posts with label நான் பேச நினைப்பதெல்லாம். Show all posts

Sunday, May 16, 2021

குரு சிஷ்யன் - 1

 ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒரு துறவி தன் சீடர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.


துறவி சொன்னார், "வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமென்றால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஆனால் அதை உங்களுக்காக செய்யுங்கள். உங்கள் மனதார செய்தீர்கள் என்றால் நீங்கள் எதையும் எதிர்பார்த்து வருத்தமடைய மாட்டீர்கள்."


அப்போது ஒரு சீடனுக்கு சந்தேகம் எழுந்தது. "குருவே, நான் பலருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியிருக்கிறேன். ஆனாலும் அவர்கள் நன்றி மறந்து எனக்கு துரோகம் செய்கிறார்கள். நான் எப்படி வருத்தமடையாமல் இருப்பது?" என்று வினவினான்.


துறவி புன்முறுவலுடன், "நீ அவர்களிடத்தில் நன்றியை எதிர்பார்கிறாய். அதனால் தான் வருத்தமடைகிறாய்" என்றார்.


சீடனுக்கு அந்த பதில் திருப்தியாக இல்லை. அவன் மீண்டும், "செய்த உதவிக்கு நன்றியைக் கூட எதிர்பார்க்காமல் எப்படி உதவுவது குருவே?" என்றான்.


துறவியோ, "சீடனே, நீ தேன் கூட்டிலிருந்து தேனெடுத்து உண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்.


அதற்கு சீடன், "ஓ, சாப்பிட்டிருக்கிறேனே!" என்றான்.


துறவி கேட்டார், "அந்த தேனை உனக்கு சேகரித்துத் தந்த தேனீக்கு என்றாவது நீ நன்றி தெரிவித்திருக்கிறாயா?"


சீடன், "இல்லை குருவே" என்றான்.


"அது போல தான். நீ நன்றி காட்டவில்ல்லை என்று தேனீ வருத்தப்படுவதில்லை. அது தன் வேலையான தேன் சேகரிப்பதை தொடர்ந்து செய்கிறது. அதே போல் நீயும் எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்." என்று பொறுமையாக பதிலளித்தார்.


ஏதோ புரிந்தது போல் தலையை ஆட்டிவிட்டு அமர்ந்த சீடன், மறுபடியும் எழுந்தான். "குருவே, அப்படியே பார்த்தாலும் தேனீ ஒன்றும் தேனை சுயமாக உருவாக்கி நமக்கு தருவதில்லையே. அதுவே மலர்களிடமிருந்து தேனை களவாடித்தானே சேர்க்கிறது. நான் ஏன் தேனீக்கு நன்றி சொல்ல வேண்டும்?" என்றான்.


அதற்கு துறவி சற்றும் சலனப்படாமல், "முற்றிலும் உண்மை. அதே போல் நீ மற்றவர்க்கு கொடுத்து உதவிய எதையுமே நீ பிறக்கும்போது இந்த உலகிற்கு கொண்டு வரவில்லை. நீயும் அதை களவாடித்தானே சேர்த்திருக்கிறாய். நீ நன்றியை எதிர்பார்க்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கேட்டார்.


புரிந்தும் புரியாதவனாய், "குருவே. என் சந்தேகம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் தேன் எடுக்க முயற்சி செய்யும்போது என்னை பல தேனீக்கள் கொட்டியிருக்கின்றன. நன்றி மறந்தவர்களைக் கண்டால் எனக்கும் அப்படித்தானே கோபம் வரும். அது நியாயம் தானே?" என்று கேட்டான்.


துறவி அவனை புன்னகையோடு நோக்கினார். சீடனோ, துறவியால் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றே எண்ணினான். தான் கூறியது தான் சரி என்று ஒப்புக்கொள்வார் என்று அவனுக்கு தோன்றியது.


ஆனால் துறவியோ, "சீடனே, உன்னை தேனீக்கள் கொட்டியதாகக் கூறினாயே, அதற்கு நீ என்ன வைத்தியம் செய்தாய்?" என்றார்.


சீடனுக்கோ தன் கேள்விக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தோன்றியது. இருந்தாலும் குருவுக்கு பதிலளிக்கும் வகையில், "கொட்டிய இடத்தில் இருந்த கொடுக்கை நீக்கிவிட்டு சுண்ணாம்பு வைத்தேன். ஓரிரு நாட்களில் வலி குறைந்துவிட்டது" என்றான்.


அதற்கு துறவி, "மிகச்சிறப்பு. ஆனால் உன்னை கொட்டிய தேனீக்கு என்ன ஆனது தெரியுமா? கொடுக்கை இழந்த தேனீ அன்றே உயிர்விட்டது. அப்படித்தான் நன்றி மறந்தவர்களைக் கண்டு கோபம் கொண்டு அவர்களை புண்படுத்துவதில் நீ நேரம் செலவிட்டால், அது அவர்களுக்கு ஒரு சிறிய காயத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். ஆனால் அது உன் வாழ்க்கையையே கெடுத்துவிடும். பறந்து சென்ற மற்ற தேனீக்கள் எப்படி தன்னம்பிக்கையோடு மீண்டும் தேனை சேர்க்கிறதோ, அப்படியே நீயும் உன் வாழ்க்கையில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். தவறான மனிதர்களின் செயல்களால் சலனமுறாதே..!" என்று கூறி முடித்தார்.


சீடன் முற்றும் விளங்கியவனாய் துறவியின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

Monday, October 21, 2013

தமிழும் தமிழனும் - 1

முன்குறிப்பு: இது தமிழாராய்ச்சிக் கட்டுரை அல்ல; இலக்கணப் பாடமும் அல்ல. நண்பன் பகிர்ந்திருந்த கவிதை ஒன்றை படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய சிலபல எண்ணங்களுக்கும், அறிந்து கொண்ட சில விஷயங்களுக்கும் எழுத்து வடிவம் கொடுப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

என்ன தான் நாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் படித்து வளர்ந்திருந்தாலும், தமிழில் உள்ள பல நுணுக்கங்கள் நம் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை. தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கும், தமிழ் இலக்கியப் புத்தகங்களை அதிகம் படிப்பவர்களுக்கும் கூட ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுவதென்பது சற்றுக் கடினமாகவே ஆகிவிட்டது. அதிலும் என்னைப் போல் சிலர், ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுகிறேன் பேர்விழி என்று ஒற்றெழுத்துக்களை எல்லா இடங்களிலும் விளாசிவிடுவதும் சகஜமாகிவிட்டது.

அது என்ன ஒற்றுப்பிழை ?

ஒற்றெழுத்து என்பது இருவேறு சொற்கள் சந்திக்கும்போதோ புணரும்போதோ சில சமயங்களில் மிகுந்து ஒலிக்கும் மெய்யெழுத்தைக் குறிக்கும். இந்த ஒற்றெழுத்தை எழுத வேண்டிய இடங்களில் எழுதாமல் விட்டாலோ, எழுதக்கூடாத இடத்தில் எழுதினாலோ, அது ஒற்றுப்பிழை (அ) சந்திப்பிழை எனப்படும்.

(எ.கா.)
கடைக்கு + சென்றேன் = கடைக்குச் சென்றேன் (ச் இல்லையேல் பிழை)
நல்ல + தம்பி = நல்லத்தம்பி (த் இருந்தால் பிழை)
தாய் + பாசம் =  தாய்ப்பாசம் (ப் இல்லையேல் பிழை)

எங்கு ஒற்று மிகும், எங்கு மிகாது என்பதற்கு தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியத்தைக் குறிப்பாகக் கொண்டு பல விதிகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இணையத்திலும் அதனைப் பற்றி பல விரிவான கட்டுரைகளும் இருக்கின்றன. ஆகையால் அதை முழுவதுமாக இங்கே நான் எழுத விழையவில்லை.

பொதுவாகப் பார்க்கும்போது இந்த ஒற்றுப்பிழைகள் படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துவது இல்லை; அதாவது பிழை இருப்பது தெரிந்தாலும் அதை ஓரங்கட்டிவிட்டு நாம் படிப்பதைத் தொடரலாம். ஆனால் சில பயன்பாடுகளில் ஒற்றுப்பிழை இருந்தால் அது நாம் எத்தனை முறைப் படித்தாலும் ஏதோ ஒரு உறுத்தலை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி ஒன்று தான் சுட்டெழுத்துக்களுடன் வரும் ஒற்றெழுத்து.

"இவன் ரொம்ப கொழப்புறான்யா. அது என்ன சுட்டெழுத்து ?" என்று கேட்பவர்களுக்கு, விக்கிபீடியா கொடுக்கும் பதில் இதோ:

சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உயிரெழுத்துகளில் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் ஆகும்.

(இதில் 'உ' என்ற சுட்டெழுத்து, தமிழ் நாட்டில் புழக்கத்தில் இல்லை. விளக்கமான பதிவு இங்கே)

(எ.கா.)
அ + காலம் = அக்காலம்
இ + மாதம் = இம்மாதம்
அ + நேரம் = அந்நேரம்
இ + வழி = இவ்வழி

இந்த பயன்பாடு நாம் பேசும் பொதுத்தமிழ் வழக்கத்தில் இல்லாதபோதும், தமிழ் மேடைகளிலும், உரைநடைகளிலும், கவிதை புனைவோரிடமும் இன்னும் வழக்கத்தில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. இது கடினமான பயன்பாடு இல்லை என்றபோதும், இது சில இடங்களில் எனக்கு ஒரு புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதை விளக்க, ஒரு எடுத்துக்காட்டை பார்போம். என் நண்பன் எழுத விரும்பியது அ + ரணத்தால் = ?
விடையைப் படிப்பதற்கு முன், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில கேள்விகளுக்கும் விடையளிக்க முயல்க:

1. அ + ரதம் = ? 
2. அ + ருசி = ?
3. இ + லஞ்சம் = ?
4. இ + ரேகை = ?
5. அ + லாபம் = ?
6. இ + யாக்கை = ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளிக்க முடிந்தால் கூட நீங்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர். என் நண்பனின் கேள்விக்கு விடையளிக்க முயற்சித்தபோது, முதலில் தோன்றியது அர்ரணத்தால். ஆனால் இப்படி எழுதியதாக எனக்கு சற்றும் நினைவு இல்லை. அடுத்த யோசனை அற்ரணத்தால். கண்டிப்பாக இதுவும் சரி இல்லை என்றே தோன்றியது. அ ரணத்தால் என்று பிரித்தே எழுதலாம் என்றால், இலக்கண ரீதியாக சரி தான் என்றபோதும், கவிதைப் பயன்பாட்டிற்கு பொருந்தி வரவில்லை. கூகுளில் நேரடியாக  இவற்றை தேடியபோதும் எதுவும் விடை தென்படவில்லை. இதைத் தேட ஆரம்பித்ததில் இணைய வழியில் பல தமிழ்த் தகவல்களையும், தமிழ் நாட்டுத் தமிழுக்கும், யாழ்ப்பாணத் தமிழுக்கும் உள்ள சில வேறுபாடுகளையும் கடந்து வந்தன என் விழிகள். அவற்றை விவரிக்க ஆரம்பித்தால் நம் தலை சுற்றும். 

இப்போது நம் கேள்விகளுக்கு விடையளிக்க, யாரோ ஒரு நண்பர் இணையத்தில் பதிந்திருந்த இந்த புணர்ச்சி விதி உதவும்:

சுட்டெழுத்துக்களும் எகர வினாவெழுத்தும் உயிரோடும் இடையின மெய்யோடும் புணரின், இடையில் வகரந் தோன்றும்; உயிரொடு புணரின் வகரம் இரட்டிக்கும்; வல்லின மெல்லின மெய்களோடு புணரின் அவ்வம் மெய்கள் மிகும்.

இதில்,
சுட்டெழுத்து + உயிரெழுத்து (அ + உயிர் = அவ்வுயிர், அ + இடம் = அவ்விடம்)
சுட்டெழுத்து + மெல்லினம் (அ + மக்கள் = அம்மக்கள், இ + நாய் = இந்நாய்)
சுட்டெழுத்து + வல்லினம் (இ + பாடல் = இப்பாடல், அ + தாமரை = அத்தாமரை)
போன்றவை நாம் ஓரளவிற்கு நாம் அறிந்தவையே.

கேள்விகளை மறுபடியும் ஒரு முறை படித்தோமானால், 
சுட்டெழுத்து + இடையினம் = ?  என்பதே நம் கேள்விக்கு விடை. மேற்கூறிய விதிப்படி,

1. அ + ரதம் = அவ்ரதம்
2. அ + ருசி = அவ்ருசி
3. இ + லஞ்சம் = இவ்லஞ்சம்
4. இ + ரேகை = இவ்ரேகை
5. அ + லாபம் = அவ்லாபம்
6. இ + யாக்கை = இவ்யாக்கை

என்பதே விடைகளாகும். இது மற்ற இடையின சொற்களுக்கும் பொருந்தும்.
ஆக, நண்பனின் கேள்விக்கு விடை "அவ்ரணத்தால்" !

இது பலருக்கு சாதாரண விஷயமாகத் தோன்றலாம். இருந்தபோதும், என்னைப் போல் சிலருக்கு இந்த பயன்பாடுகள் மறந்து போயிருக்கக் கூடும். அதை இந்தக் கட்டுரை மூலமாக நினைவுப் படுத்தவே விரும்பினேன்.

அது மட்டுமல்லாமல், சிலர் தமிழை திருத்துவதாகவும் செம்மைப்படுத்துவதாகவும் எண்ணிக் கொண்டு, வேற்றுமொழி வார்த்தைகளைத் தமிழில் எழுதும்போது தவறான உச்சரிப்புகளைப் பரப்புகின்றனர்.

உதாரணம்,

விஷயம் = விசயம்
ஜப்பான் = சப்பான்
இராஜ ராஜ சோழன் = இராச ராச சோழன்

போன்றவை. இராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளில் கூட ஜ, ஷ, ஹ போன்ற எழுத்துக்களை உபயோகித்திருப்பதை இப்போதும் நம்மால் காண முடியும். அப்படியிருக்க, அவன் பெயரையே திருத்தும் யோக்யதையை நமக்கு யார் கொடுத்தது? தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்த்திருமுறை நூல்களை ஏடுகளில் ஏற்றிய பெருமை உடைய அவனை விடவா இவர்கள் தமிழ்ப்பற்று கொண்டவர்கள்? பல வேற்று மொழி வார்த்தைகளையும் கூட உள்வாங்கி வளர்ந்து நிற்பதால் தான் பல மொழிகள் இன்னும் புழக்கத்திலிருக்கின்றன. அதைத் தவறு என்று ஒதுக்கி விட வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், வேற்று மொழி வார்த்தைகளை தவிர்த்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாமே ஒழிய, அதை நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உச்சரிப்பது ஏற்புடையது அல்ல. அப்படிச் செய்பவர்களைத் தமிழின் நலம் விரும்பிகளாக ஏற்கவும் என் மனம் மறுக்கிறது.

ஆகையால், இது போன்ற தேவை இல்லாத ஆராய்ச்சிகளை விட்டு விட்டு இருக்கும் தமிழின்பத்தை முறையாக பிழை இல்லாமல் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே தமிழ் வாழும் என்பதே என் கருத்து.

உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்க. 
நன்றி ! 

சிறப்புத் தகவல்: 
இணையத்தில் மேலும் பல தமிழ்த் தகவல்களைப் பகிர விக்கிபீடியா கொடுக்கும் ஓர் அறிய வாய்ப்பு:
விக்கிப்பீடியா: 2013 கட்டுரைப் போட்டி - 30,000/- இந்திய ரூபாய் பரிசு!


Monday, October 8, 2012

தனி மனித ஒப்பீடு

பரிணாம வளர்ச்சியின் முதுகெலும்பாக கருதப்படுவது "ஒப்பீடு". மனித வாழ்க்கையின் சிறு சிறு அறிதலிலும் புரிதலிலும் ஊடுருவிப் பார்த்தால் நாம் சென்றடையும் மையக் கருத்தாக்கம் இந்த "ஒப்பீடு" தான் (குழந்தை தாய்க்கும், தந்தைக்குமான வித்தியாசத்தை அறிந்து கொள்வது ஒப்பீடு மூலம் தான் என்பது ஒரு உதாரணம்). ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைச் சுற்றி உள்ளவற்றுடன் தன்னை ஒப்பிட்டு தான் தன்னை புரிந்து கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் முயல்கிறான் என்கிறது "சமூக ஒப்பீடு கோட்பாடு" (Social Comparison Theory). இந்த ஒப்பீடு வெளியிலிருந்து நமக்குள் திணிக்கப் பட்டால், அது ஏற்படுத்தும் விவரிக்க முடியாத அழுத்தங்களைப் பற்றி நான் சொல்ல விழைவது தான் இந்த "தனி மனித ஒப்பீடு" (Individual comparison).

ஒப்பீடுகளின் நன்மை தீமைகளை அலசி ஆராய்வதற்கோ, தர்க்கம் செய்வதற்கோ இங்கு இதை நான் எழுதவில்லை. ஒப்பீடுகள் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்வது எப்படி என்ற வலையைப் பின்ன நான் கொடுக்கும் ஒரு சிறு நரம்பு தான் இந்த கட்டுரை. மற்றவர்களோடு நம்மை நாமே ஒப்பிட்டு நம் ஆற்றலை புரிந்து கொள்ள முயற்சிப்பதற்கும், அது மற்றவர்கள் மூலம் நம் மீது திணிக்கப்படும்போது ஏற்படும் விளைவுகளுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன. இது ஏதோ சாமானியனுக்கு மட்டும் ஏற்படும் அனுபவம் அல்ல. பல சாதனைகள் புரிந்தவர்களும் சந்திக்கும் ஒருவகையான நிர்பந்தம் தான் இந்த தனி மனித ஒப்பீடு. ஆனால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று நாம் நினைத்தாலும், அவர்களுக்கு அது பழகிப் போய் விடுகிறது என்பதுதான் உண்மை.

இதன் அடிப்படையை விளக்க ஒரு பழமொழியை உதாரணமாக கொள்வோம்:

"உயர உயர பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகாது"

இதைப் படிக்கும்போதோ, எழுதும்போதோ எனக்கு எப்பொழுதும் ஏற்படும் ஒரு சந்தேகம், "குருவியை பருந்தோடு அனாவசியமாக எதற்காக ஒப்பிட வேண்டும் ?" என்பது தான். ஒரு குருவி அதன் தகுதியை மீறி கடும் முயற்சியால் இவ்வளவு உயரம் பறக்கிறதே என்று பாராட்டுபவர்களை விட, அதைக் கழுகுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுபவர்களே அதிகம் உள்ளனர். இது போன்ற விமர்சனங்கள் இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்தும்; ஒன்று - தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex), இரண்டு - மனச்சோர்வு (Dejection). 

இதில் தாழ்வு மனப்பான்மை நம்முடைய திறமைகளை வெளிக்கொணர உதவும் உந்து சக்தியை குறைத்துவிடும். மனச்சோர்வோ, நாம் எது செய்தாலும் அது பாராட்டப்பட போவதில்லை என்று மற்றவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும். இது பின்னாளில் நாமும் இது போலவே மற்றவர்களை பாராட்ட தெரியாமலும், மட்டம் தட்டும் மனோபாவத்தையும் கொண்டவர்களாக வளரவே வழி வகுக்கும்.

"அவனப் பாரு எப்படி படிக்கிறான்னு. நீயும் இருக்கியே", "அவன் அவன் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறான். உன்னால ஏன் முடியல ?", "நீ விளையாடி கிழிச்சது போதும், அவள மாதிரி எப்ப பர்ஸ்ட் ரேங்க் வாங்கப் போற", போன்ற வசனங்கள் (வசவுகள்) நாம் பெரும்பாலும் கேட்டுப் பழகியவையே. இவை இது வரை யாருக்கும் நேர்மறையான விளைவுகளைத் தந்ததில்லை. மாறாக இப்படி சொல்பவர்களின் மேல் வெறுப்பைத் தான் ஏற்ப்படுத்தி இருக்கின்றன. இதற்கு பதிலாக, "நீ நல்லா தான் விளையாடுற. கூடவே படிப்பையும் கவனிச்சா இன்னும் நல்லா வருவ", "நீ வாங்குற சம்பளம் இப்பதைக்கு போதும் தான். ஆனா இன்னும் நல்ல வேலைக்கு முயற்சி பண்ணலாமே" போன்ற அக்கறையான வார்த்தைகள் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.

திட்டி வேலை வாங்குவதை விட, தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது சிறந்தது என்பது போல, ஒப்பிட்டு குறை சொல்வதை விட, ஊக்குவித்து கற்பிப்பதே சிறந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ ?

Tuesday, September 25, 2012

கானல் நீர்

"I know only one culture - That is Agriculture." - சர்தார் வல்லபாய் படேலின் வார்த்தைகள் இவை. நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் ஏற்ப்பட்டு வந்தாலும், விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை நம்மால் மறுக்க முடியாது. இந்த வலைப்பூவில் என் வார்த்தைகளைக் கோர்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம், இணையம் பற்றி இம்மி அளவும் தெரியாமல் நம் நாட்டின் எங்கோ ஓர் மூலையில், வயல் வெளியில் விதைத் தூவிக் கொண்டிருக்கிறான் ஒரு விவசாயி என்பதை நம்மால் மறுக்க முடியாது. அவன் நம்பி இருப்பது நிலங்களையும் நீர் நிலைகளையும் மட்டுமே.
 
பெரும்பகுதி தமிழ் நாட்டு விவசாயிகளை வாழ வைப்பது இரண்டு தாய்மார்கள்; ஒன்று பூமித் தாய், மற்றொன்று காவிரித் தாய். ஒரு தாய் விலை மகளாக மாறி வருகிறாள். விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி வருகின்றன. அதைக் கண்டும் காணாதது போல் வெட்கமின்றி அதில் பங்கெடுத்துக் கொள்ளும் தனயன்களாய் நிற்கிறோம் நாம். மற்றொரு தாயோ, பிறந்த வீட்டிலேயே சிறைப்பட்டு கிடக்கிறாள். காவிரித் தாய்க்கு கர்நாடக மக்கள் வேறு, தமிழக மக்கள் வேறோ ? ஒரு தாய் மக்களுள் வேற்றுமை ஏது ? இடர்கால பகிர்வுப் படி நீர் வழங்கக் கூட கர்நாடக அரசு மறுக்கிறது. பிரதமர் பேச்சுக்கோ, நீதி மன்ற உத்தரவுகளுக்கோ மரியாதை இல்லை.
 
வான் மழை பொய்த்து, பயிர்கள் வாடும்போதெல்லாம், காவிரி நீரை நம்பியே காலத்தைப் போக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். வரும் காலங்களில் நீராதரங்களும், நிலத்தடி நீர்வளமும் வற்றி போகும் நிலை ஏற்பட்டால் நமக்கு மிஞ்சப்போவது, மெருக்கேற்றப்பட்ட தார் சாலைகளில் சுட்டெரிக்கும் வெயிலில் ஐம்பதடி தூரத்தில் மட்டுமே தென்படும் கானல் நீரும், மலடாய்ப் போட பூமியை நம்பி ஏமாந்து போன விவசாயியின் கண்ணீரும் மட்டுமே.
 
நீரில்லாமல் வாடுவது பயிர்கள் மட்டுமல்ல, அதை நம்பி உள்ள பல வயிறுகளும் தான் என்பதை அரசாங்கங்கள் புரிந்து கொள்ளும் நாள் எப்போது வருமோ ?

Thursday, April 21, 2011

கொடூரம்..

இந்த வார்த்தையை இதற்கு முன் பல முனைகளிலிருந்து கேட்டு, பயன்படுத்தி, அர்த்தம் புரிந்திருந்தபோதிலும், அதை முழுதாய் உணர்ந்ததில்லை நான். "கொடூரமாய் கொலை செய்யப்பட்டார்", "கொடூரமாய் கற்பழிக்கப்பட்டார்" என்றெல்லாம் நாளிதழ்களில் படிக்கும்போது அதன் அர்த்தம் விளங்கிற்றே ஒழிய அந்த தாக்கத்தை பெரிதாய் மனதிற்கு கொண்டு சென்றதில்லை, நேற்று வரை..

ஃபேஸ் புக்கின் முதற்பக்கத்தை அலசிக்கொண்டிருந்த என் கண்களுக்கு தென்பட்டது என் நண்பன் பகிர்ந்திருந்த யூ-ட்யூப் நிகழ்படம் (வீடியோ). இலங்கையில் அரங்கேறிய இனப்படுகொலையை ஐ.நா பத்திரிக்கையாளர் ஒருவர் படம் பிடித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது அந்த நிகழ்படத்தில்.   சற்று நேரமே ஓடிய அந்த நிகழ்படப்பதிவில் தோன்றிய காட்சிகள் என் நெஞ்சை உலுக்கிப்போட்டது என்றே சொல்லலாம். அத்தனைக் கொடூரம். அப்பொழுது தான் உணர்ந்தேன் 'கொடூர'த்தின் அர்த்தத்தை.

ராணுவத்தினர் ஒருவர் பின் ஒருவராக இரண்டு ஆண்களை நிர்வாணப்படுத்தி, கண்களைக் கட்டி அழைத்து வந்தார்கள். பின்புலத்தில் துப்பாக்கி சத்தம் வெடித்துக் கொண்டிருக்கப் பிணங்களால் சூழப்பட்டிருந்த அந்த இடத்தை பார்க்கவே சகிக்கவில்லை. அவ்விருவரையும் ராணுவத்தினர் முதுகில் உதைத்து பின்னந்தலையில் சுட்டதைப் பார்த்தபோது நெஞ்சம் அதிர்ந்தது. கொட கொடவென்று உதிர்ந்த குருதியில் வழிந்தோடிக் காய்ந்து போனது மனித நேயமும், உண்மையான வீரமும். யார் இவர்கள் ? என்ன குற்றத்துக்காக வரையறுக்கப்பட்ட தண்டனை இது ? இது இலங்கையில் நடந்தது தானா ? இவர்கள் புலிகளா ? இல்லை அப்பாவித் தமிழர்களா ? அனைத்துக்கும் காரணம் வெறும் இன வெறியா ? என்னால் துளியும் யூகித்துப் பார்க்க முடியவில்லை.

சக மாணவனை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் அடக்கி பேருந்தில் கிடத்தியவனுக்கு 15 வருடங்களுக்கு பிறகு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது இந்திய நீதிமன்றம். கைதானவர்களையும் சரணடைந்தவர்களையும் அசிங்கப்படுத்தி சித்ரவதை செய்து சாகடிப்பது சிங்கள நீதியோ ? விளங்கவில்லை.

விடுதலைப்புலிகள் சிக்கிக்கொண்டால், சயனைடு குப்பிகளை சப்பி இறந்து போவார்கள் என்று கேள்விப்பட்டபோதெல்லாம் அவர்களை கோழைகள் என்று கூறி நகைத்ததுண்டு. ஆம், தூக்குக்கயிற்றுக்கு முத்தமிட்டு மரணத்தை ஏற்றுகொண்டதாய் கட்டபொம்மன் கதை கேட்டு வளர்ந்த நமக்கு, தற்கொலை கோழத்தனம் தான். ஆனால் வெள்ளையனுக்கு இருந்த கட்டுப்பாடுகள் கூட இன்று கூட்டம் கூட்டமாய் மனிதர்களைக் கொன்று குவித்திருக்கும் இலங்கை ராணுவத்திற்கு இல்லையே.

சரணடைந்த பின்னும் சல்லடையாய் துளைக்கப்பட்டு மனிதம் இழந்த மானுடர் கையால் மானம் இழந்து உயிர்விடல்விடவும் தற்கொலை மேலானது தான். ஏற்கனவே இருண்டு கொண்டிருக்கும் மனித மனங்கள் இது போன்ற நிகழ்வுகளைக் கண்டால் இரும்பாய் உறைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது.

தமிழர்கள் உயிர் காக்க புரட்சியாய் வெடித்து பலர் போராடிக்கொண்டிருக்கையில் வெறுமனே அமர்ந்து இணையவெளியில் என் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருப்பதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது. வேறென்ன செய்ய ? இதைப் படித்துகொண்டிருக்கும் உங்களைப்போல நானும் ஒரு கையாலாகாதவன் தான்.

மனிதம் இனி மெல்லச் சாகும்..

குறளோசை