Sunday, January 22, 2023

போர்க்களம் மாறலாம் - 3. வளையல் சிரித்தது

2. செம்பரிக் குன்று

3. வளையல் சிரித்தது

ஒரு ஊர்ப் பருந்தின் மேலமர்ந்து மலை உச்சியிலிருந்து பறந்து சென்றோமானால் எங்கும் வயல்வெளிகளும், தென்னை மரங்களும், வேங்கை மரக்காடுகளும் நிறைந்து ஒரு பச்சைப் பட்டு உடுத்திய அழகியைப் போல் காட்சியளிக்கும் செம்பவள நாட்டின் தலைநகரமான சிங்காபுரி. அதோ அந்த அழகி அணிந்திருக்கும் முத்துச் சரம் போல் தெரிகிறதே, அது என்ன?அது தான் வேங்கி நாட்டில் எங்கோ பிறந்து, மலைகளிலிருந்து விழுந்து,  பல தடைகளைக் கடந்து செம்பவள நாட்டையே வளம்கொழிக்கச் செய்துகொண்டிருந்த சோமமுகி நதியோ? பொங்கும் நதியலைகள் பாற்கடலைப் போலல்லவா இருக்கிறது? இதை பாலாறு என்றும் அழைக்கலாமோ?

 இத்தனை அழகிய நகரத்திற்கு மேலும் மெருகூட்டின சோமமுகி நதியால் இயற்கை அகழி அமையப் பெற்ற சிங்காபுரியின் கோட்டை மதில்களும், கோட்டையினுள் அமைந்த மாட மாளிகைகளும். இந்த சிங்காபுரிக் கோட்டைக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது செம்பரிக்குன்றின் அடிவாரத்தில் அமைந்த செவ்வேள் மாடம். அது முருகப்பெருமானுக்கு எழுப்பப்பட்டிருந்தக் கற்றளி. அந்த கோயிலின் பிரம்மாண்டத்தையும் கலைநயத்தையும் கண்டு மெய்மறந்தவனாய் கோயிலின் பிரதான வாயில் அருகில் இருந்த மேற்கூரையை அண்ணாந்து பார்த்து நடந்து கொண்டிருந்தான் வாலிபன் ஒருவன். இவனை பின் தொடருங்கள். இந்தப் பயணத்தில் நமக்கான வழிகாட்டி இவன் தான். யார் இந்த வாலிபன்? வேறு யார்? இவன் தான் நம் கதாநாயகன்  உருத்திரன்.

 மேலே பார்த்து வியந்து நடந்த உருத்திரன், கல்முற்றத்தின் தூண்கள் ஒன்றில் தன்னை அறியாமல் முட்டிக் கொண்டான். சட்டென்று சுதாரித்து நின்றவன் தனது வலது புறம் திரும்பினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. அந்த மண்டபத்தின் முடிவிலிருந்த சுவற்றில் ஓர் ஓவியம். அதுவும் ஒரு பெண்ணின் ஓவியம். காண்பவர் கண்களை சட்டெனக் கவரும் அந்த ஓவியத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று அவன் மனம் அவனைத் தூண்டியது. அருகில் செல்லச் செல்ல அந்த ஓவியத்தில் இருந்த இளம்பெண் நவரசமும் ததும்ப நாட்டியம் ஆடுவது போல் தோன்றியது அவனுக்கு. "இது என்ன மாயம்? நாம் இதுவரைக் கண்டிராத தெய்வீகக் கலைப் பொருந்திய முகம்? யார் இவள்? நாம் கதைகளிலே கேட்ட காந்தர்வ குல கன்னியோ? தேவலோகத்து மேனகையோ? தேவ கன்னியர் எல்லாம் சுவற்றில் கூடவா குடியிருப்பார்கள்? ச்சீ.. ச்சீ.. இது என்ன திடீரென நமக்கு பிடித்த பிரமை நோய்?", என்று என்னவெல்லாமோ யோசித்துக் கொண்டு கண்ணிமைக்காமல் அந்த ஓவியத்தை நோக்கி நடந்தான். நெருங்க நெருங்க அந்தப் பெண்ணின் அழகும் வசீகரமும் அவன் மனதை கொள்ளை கொண்டது. "இது வெறும் ஓவியம் அல்லவா? இவ்வளவு அழகை கற்பனை செய்து ஒருவனால் வரைய முடியுமோ? இதை வரைந்து வைத்த ஓவியன் இவளை எங்கு கண்டானோ? அப்படி கண்டிருந்தால் அவன் எவ்வளவு பாக்கியம் அடைந்தவன்?", என்று சிந்தித்துக் கொண்டே நடந்தவன் அங்கே தரையில் கிடந்த பலகை ஒன்றில் இடறிக் கீழே விழுந்தான். உடனே "கலகல" வென ஒரு சிரிப்பொலி கேட்டது.

 சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவனுக்கு தூண் மறைவிலிருந்து வெளிப்பட்ட கைகளில் இருந்த அழகிய வேலைப்பாடமைந்த வளையல்கள் தான் கண்களில் பட்டன. "நாம் கேட்டது சிரிப்பொலியா, இந்த வளையல்கள் குலுங்கிய சத்தமா? அல்லது இந்த ஊரில் வளையல்கள் தான் சிரிக்குமா?", என்று ஏதேதோ எண்ணிக் கொண்டு எழுந்து பார்த்தவனுக்கு ஒரு மாபெரும் ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. ஆம் உங்கள் யூகம் சரி தான். அவன் ஓவியத்தில் பார்த்த பேரழகி இதோ அவன் கண் முன்னால். ஆனால் அவள் நடனமாடவில்லை. அவள் கைகளில் தூரிகை இருந்தது.

- தொடரும்

4. தூரிகை ஏந்திய காரிகை

Saturday, January 21, 2023

போர்க்களம் மாறலாம் - 2. செம்பரிக் குன்று

1. புழுதி பறந்தது

2.     செம்பரிக் குன்று

 

பரந்த பாரத தேசத்தில் அசோகச் சக்ரவர்த்தி கோலோச்சிய காலத்தில், தமிழ் கூறும் நல்லுலகு சங்க கால சேர, சோழ, பாண்டியர்களாலும், சத்ய புத்திரர்களாலும் ஆளப்பட்ட தென்புலத்து பெருநிலமாக விளங்கியது. தமிழகத்தின் வடகோடி எல்லையில் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் சோழர் ஆளுகைக்குட்பட்ட சிறிய தேசம் தான் செம்பவள நாடு. செம்பவள நாட்டிற்கும் மௌரியப் பேரரசின் நிலப்பரப்பிற்கும் இடையிலான எல்லையை வரையறுக்கும் மலைத்தொடரின் பெருங்குன்றாய் எருமை போன்ற வடிவில் உயர்ந்து நின்றது இந்த செம்பரிக் குன்று. "பரி என்றால் குதிரை அல்லவா?" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

 

இந்தக் குன்றுக்கு தெற்கில் அமைந்த செம்பவள நாடு ஒரு செம்மண் பூமி. "தானுவந்து பொய்க்காமல் மாரி பொழிதலும் வேருவந்து நிற்காமல் வளம் கொழித்தலும்.." என்று பாடல் பெற்ற நிலவளமும் நீர்வளமும் கொண்ட நாடு. இதற்கு எதிர்மறையாக இந்த மலைப்பகுதிக்கு அப்பால் உள்ள நிலப்பகுதி ஒரு வறண்ட பீடபூமியாக விளங்கியது. பல காலமாக எருமை வடிவிலான இந்த குன்றின் மேல் எமதர்மன் அமர்ந்து ஆட்சி செய்வதாகவும் அவன் பார்வை வடக்கு நோக்கி இருப்பதால் தான் அந்த நிலம் வறண்டு போனதாகவும் செம்பவள நாட்டு மக்கள் நம்பி வந்தனர். எமனின் பார்வை தங்கள் பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும் தக்ஷிணாயன காலத்தின் ஆரம்பமான ஆடி மாதத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்றி படையலிட்டு வணங்கி வந்தனர் ஒரு சாரார். அதனால் இந்தக் குன்று வெகுகாலம் எமனேறும் பரிக்குன்று (எமன்+ஏறும்+பரி என்பது எமதர்மனின் வாகனமான எருமையைக் குறித்தது) என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் செம்மண் மற்றும் சிவப்பு நிற பாறைகளால் சூழப்பட்டிருந்ததால் காலப்போக்கில் அது செம்பரிக் குன்றாய் மாறிப்போனது.

 

சிறு தேசமாயினும் இந்த செம்பவள நாடு சுற்றியிருந்த பல தேசத்து அரசர்களின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்கு காரணம், சோழர் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பகுதி ஆயினும், தனித்து இயங்கும் சுதந்திரத்தையும் செல்வாக்கையும் பெற்ற நாடாகத் திகழ்ந்தது. தென் மேற்கில் சத்ய புத்திரர்களோடும், மேற்கில் கேரள புத்திர தேசம் என்று அழைக்கப்பட்ட சேர நாட்டோடும், வடக்கே மௌரிய ஆட்சியின் கீழமைந்த பல தேசங்களோடும் வணிக உறவு இருந்தது செம்பவள நாட்டிற்கு. குறிப்பாக, பீடபூமிக்கு வடக்கே இருந்த பல குறுநில மன்னர்களின் படையெடுப்பிலிருந்தும், வறண்ட தேசத்து கொள்ளையர்களின் ஊடுருவல்களிலிருந்தும் அந்த நாட்டை காப்பாற்றி வந்தது இந்த செம்பரிக் குன்று.

 

இந்தக் குன்றின் வடகிழக்கு பகுதியில் மலை உச்சியிலிருந்து உள்ளே இறங்கும் ஓர் இருண்ட குகைப்பாதை இருந்தது. இந்தப் பாதை எங்கே செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது. உள்ளே இறங்க முயற்சித்தவர்கள் யாரும் மீண்டு வரவில்லை என்றும், உள்ளே சென்ற மறுநொடி தீப்பந்தங்கள் தாமாக அணைந்து விடுவதாகவும் ஒரு பேச்சு இருந்தது. வீராதி வீரர்கள் பலர் மாண்டு போனதாகக் கூறப்பட்டது. மேய்ச்சலுக்கு செல்லும் கால் நடைகளும் காணாமல் போவதால் தீபம் ஏற்றும் நாளைத்தவிர மற்ற நாட்களில் மக்கள் அந்த மலை உச்சிக்கு செல்லவே பயந்தனர். ஆகையால் அந்தப் பாதையை பலரும் பாதாள உலகத்தின் திறவுகோல் என்றும், நரகத்தின் வாசற்படி என்றும் அழைத்து வந்தனர். அந்த மர்மத்தை உடைக்கும் ஒருவன் பிறக்காமலா போய் விடுவான்? என்று செம்பவள நாட்டு மக்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தனர்.

- தொடரும்

3. வளையல் சிரித்தது

Friday, January 20, 2023

போர்க்களம் மாறலாம் - 1. புழுதி பறந்தது

இதோ இன்னொரு புதிய முயற்சி. ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்ற எனது வெகு நாள் வேட்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கே தொடக்கப்புள்ளி வைக்கிறேன். தவறுகளிலிருந்தும் விமர்சனங்களிலிருந்தும் தான் சிறந்த கற்றலும் கலையும் வசப்படும் என்ற நம்பிக்கை உடையவன் நான். எனவே, குறை நிறைகளை வெளிப்படையாக பின்னூட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும். வாசிப்பிற்கு நன்றி.

- சுகன் ராஜ் பாரதி 

1.     புழுதி பறந்தது

 

வேலும் வாளும் உரசும் சத்தம் விண்ணைப் பிளந்து கொண்டிருந்தது. எங்கு காணினும் மறவர் கூட்டம் மனித வலிமையின் வரம்புகளை மீறி ஆயுதங்களை செலுத்திக் கொண்டிருந்தது. விற்களிலிருந்து புறப்பட்ட பாணங்கள் புற்றீசலைப் போல் புறப்பட்டுச் சென்று இருபுறமும் வீரர்களை பதம் பார்த்துக் கொண்டிருந்தன. இந்த பாணங்களின் வீச்சில் சிதைந்து போனது மனித உயிர்கள் மட்டுமல்ல. வேல் தாங்கிய வீரர்களைக் கூட புழுவைப் போல் நசுக்கி தும்பிக்கையில் பந்தாடிக் கொண்டிருந்த யானைகளையும், குண்டும் குழியும் தாண்டி, தாக்க வரும் வீரர்களினூடே லாவகமாய் புகுந்து ஓடி தன்மேல் அமர்ந்து ஈட்டி வீசும் வீரனைப் பாதுகாத்து வந்த புரவிகளையும் துளைத்துச் சென்றது விண்ணிலிருந்து பெய்த கணை மழை.

 

ஆம். அது ஒரு போர்க்களம். வீரம் செறிந்த பூமி. இன்னுயிரை துச்சமாக மதித்து தாய் நாட்டிற்காகப் போரிட்டுக் கொண்டிருந்த படைகளின் சங்கமம். "மெய்வேல் பறியா நகும்" என்ற பொய்யாமொழிப் புலவன் வாக்கைப் போல் தன் மேல் பாய்ந்த வேலைப் பிடுங்கி போரிடும் மாவீரர்களைக் கண்ட பூமி. கொட்டும் குருதி காயும் முன்னே வெட்டும் கரங்கள் பாயும் களமாக அது இருந்தது. மார்பில் விழுப்புண் பெறவேண்டும் என்று கவசங்களைத் துறந்து வாள்வீசிக் கொண்டிருந்தக் கூட்டம் அது.

 

இருபுறமும் சளைக்காத படைகள். ராட்சதத் தேர்ச்சக்கரங்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலாட்படை வீரர்களை எண்ண நமக்கு நேரம் போதாது. இருந்தும் அந்த களத்தில் வெற்றிடம் இல்லை. படைகள் தாங்கியிருந்த கொடிகள் இல்லையேல் எதிரிகளைக்கூட இனம் காண முடியாத அளவிற்கு வீரர்களால் நிரம்பி வழிந்த நிலப்பரப்பு.

 

தேர்களும் குதிரைகளும் யானைகளும் காலடிகளும் ஓடிய ஓட்டத்தில் எதிர் நின்ற செம்பரிக் குன்றுக்கும் மேலெழும்பி அங்கே புழுதி பறந்தது. எதற்கு இந்த போர்? அந்தப் புழுதிக்கும் நடுவே ஓர் கருப்பு குதிரையில் எந்தப் பிடிமானமும் இன்றி இரு கைகளாலும் வேல் சுழற்றும் இந்த இளங்காளை யார்? அவன் நெற்றியில் வழிவது வியர்வையா குருதியா என்பதறியாமல் எதையும் பொருட்படுத்தாமல் எதை நோக்கி முன்னேறிச் செல்கிறான்? இவன் செல்லும் திசையின் எதிரில் இரு தந்தம் கொண்ட முரட்டு யானையின் மீதமர்ந்து போரிடும் மாவீரர் யார்? அவர் கண் அசைவிற்கு கிளர்ந்து போரிடும் படைகளின் தளபதியோ? அந்த யானையை நோக்கி ஆக்ரோஷமாய் விரையும் குதிரை வீரனின் நோக்கம் என்ன? 

 

- தொடரும்

2. செம்பரிக் குன்று

Sunday, May 16, 2021

குரு சிஷ்யன் - 1

 ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒரு துறவி தன் சீடர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.


துறவி சொன்னார், "வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமென்றால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஆனால் அதை உங்களுக்காக செய்யுங்கள். உங்கள் மனதார செய்தீர்கள் என்றால் நீங்கள் எதையும் எதிர்பார்த்து வருத்தமடைய மாட்டீர்கள்."


அப்போது ஒரு சீடனுக்கு சந்தேகம் எழுந்தது. "குருவே, நான் பலருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியிருக்கிறேன். ஆனாலும் அவர்கள் நன்றி மறந்து எனக்கு துரோகம் செய்கிறார்கள். நான் எப்படி வருத்தமடையாமல் இருப்பது?" என்று வினவினான்.


துறவி புன்முறுவலுடன், "நீ அவர்களிடத்தில் நன்றியை எதிர்பார்கிறாய். அதனால் தான் வருத்தமடைகிறாய்" என்றார்.


சீடனுக்கு அந்த பதில் திருப்தியாக இல்லை. அவன் மீண்டும், "செய்த உதவிக்கு நன்றியைக் கூட எதிர்பார்க்காமல் எப்படி உதவுவது குருவே?" என்றான்.


துறவியோ, "சீடனே, நீ தேன் கூட்டிலிருந்து தேனெடுத்து உண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்.


அதற்கு சீடன், "ஓ, சாப்பிட்டிருக்கிறேனே!" என்றான்.


துறவி கேட்டார், "அந்த தேனை உனக்கு சேகரித்துத் தந்த தேனீக்கு என்றாவது நீ நன்றி தெரிவித்திருக்கிறாயா?"


சீடன், "இல்லை குருவே" என்றான்.


"அது போல தான். நீ நன்றி காட்டவில்ல்லை என்று தேனீ வருத்தப்படுவதில்லை. அது தன் வேலையான தேன் சேகரிப்பதை தொடர்ந்து செய்கிறது. அதே போல் நீயும் எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்." என்று பொறுமையாக பதிலளித்தார்.


ஏதோ புரிந்தது போல் தலையை ஆட்டிவிட்டு அமர்ந்த சீடன், மறுபடியும் எழுந்தான். "குருவே, அப்படியே பார்த்தாலும் தேனீ ஒன்றும் தேனை சுயமாக உருவாக்கி நமக்கு தருவதில்லையே. அதுவே மலர்களிடமிருந்து தேனை களவாடித்தானே சேர்க்கிறது. நான் ஏன் தேனீக்கு நன்றி சொல்ல வேண்டும்?" என்றான்.


அதற்கு துறவி சற்றும் சலனப்படாமல், "முற்றிலும் உண்மை. அதே போல் நீ மற்றவர்க்கு கொடுத்து உதவிய எதையுமே நீ பிறக்கும்போது இந்த உலகிற்கு கொண்டு வரவில்லை. நீயும் அதை களவாடித்தானே சேர்த்திருக்கிறாய். நீ நன்றியை எதிர்பார்க்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கேட்டார்.


புரிந்தும் புரியாதவனாய், "குருவே. என் சந்தேகம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் தேன் எடுக்க முயற்சி செய்யும்போது என்னை பல தேனீக்கள் கொட்டியிருக்கின்றன. நன்றி மறந்தவர்களைக் கண்டால் எனக்கும் அப்படித்தானே கோபம் வரும். அது நியாயம் தானே?" என்று கேட்டான்.


துறவி அவனை புன்னகையோடு நோக்கினார். சீடனோ, துறவியால் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றே எண்ணினான். தான் கூறியது தான் சரி என்று ஒப்புக்கொள்வார் என்று அவனுக்கு தோன்றியது.


ஆனால் துறவியோ, "சீடனே, உன்னை தேனீக்கள் கொட்டியதாகக் கூறினாயே, அதற்கு நீ என்ன வைத்தியம் செய்தாய்?" என்றார்.


சீடனுக்கோ தன் கேள்விக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தோன்றியது. இருந்தாலும் குருவுக்கு பதிலளிக்கும் வகையில், "கொட்டிய இடத்தில் இருந்த கொடுக்கை நீக்கிவிட்டு சுண்ணாம்பு வைத்தேன். ஓரிரு நாட்களில் வலி குறைந்துவிட்டது" என்றான்.


அதற்கு துறவி, "மிகச்சிறப்பு. ஆனால் உன்னை கொட்டிய தேனீக்கு என்ன ஆனது தெரியுமா? கொடுக்கை இழந்த தேனீ அன்றே உயிர்விட்டது. அப்படித்தான் நன்றி மறந்தவர்களைக் கண்டு கோபம் கொண்டு அவர்களை புண்படுத்துவதில் நீ நேரம் செலவிட்டால், அது அவர்களுக்கு ஒரு சிறிய காயத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். ஆனால் அது உன் வாழ்க்கையையே கெடுத்துவிடும். பறந்து சென்ற மற்ற தேனீக்கள் எப்படி தன்னம்பிக்கையோடு மீண்டும் தேனை சேர்க்கிறதோ, அப்படியே நீயும் உன் வாழ்க்கையில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். தவறான மனிதர்களின் செயல்களால் சலனமுறாதே..!" என்று கூறி முடித்தார்.


சீடன் முற்றும் விளங்கியவனாய் துறவியின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

Thursday, July 11, 2019

உறவு

ஆயிரம் உரசல்களுக்கு பிறகும்
விரிசல் இன்றி தொடர்கின்றன
தண்டவாளங்கள்..

Saturday, March 21, 2015

இழப்பு

நெருக்கமானவர்களின் மரணத்தை விட
நம்மை அதிகம் பாதிக்கிறது
அவர்களின் அலைப்பேசி எண்ணும்
ஃ பேஸ்புக் கணக்கும்..!!

Monday, October 21, 2013

தமிழும் தமிழனும் - 1

முன்குறிப்பு: இது தமிழாராய்ச்சிக் கட்டுரை அல்ல; இலக்கணப் பாடமும் அல்ல. நண்பன் பகிர்ந்திருந்த கவிதை ஒன்றை படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய சிலபல எண்ணங்களுக்கும், அறிந்து கொண்ட சில விஷயங்களுக்கும் எழுத்து வடிவம் கொடுப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

என்ன தான் நாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் படித்து வளர்ந்திருந்தாலும், தமிழில் உள்ள பல நுணுக்கங்கள் நம் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை. தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கும், தமிழ் இலக்கியப் புத்தகங்களை அதிகம் படிப்பவர்களுக்கும் கூட ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுவதென்பது சற்றுக் கடினமாகவே ஆகிவிட்டது. அதிலும் என்னைப் போல் சிலர், ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுகிறேன் பேர்விழி என்று ஒற்றெழுத்துக்களை எல்லா இடங்களிலும் விளாசிவிடுவதும் சகஜமாகிவிட்டது.

அது என்ன ஒற்றுப்பிழை ?

ஒற்றெழுத்து என்பது இருவேறு சொற்கள் சந்திக்கும்போதோ புணரும்போதோ சில சமயங்களில் மிகுந்து ஒலிக்கும் மெய்யெழுத்தைக் குறிக்கும். இந்த ஒற்றெழுத்தை எழுத வேண்டிய இடங்களில் எழுதாமல் விட்டாலோ, எழுதக்கூடாத இடத்தில் எழுதினாலோ, அது ஒற்றுப்பிழை (அ) சந்திப்பிழை எனப்படும்.

(எ.கா.)
கடைக்கு + சென்றேன் = கடைக்குச் சென்றேன் (ச் இல்லையேல் பிழை)
நல்ல + தம்பி = நல்லத்தம்பி (த் இருந்தால் பிழை)
தாய் + பாசம் =  தாய்ப்பாசம் (ப் இல்லையேல் பிழை)

எங்கு ஒற்று மிகும், எங்கு மிகாது என்பதற்கு தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியத்தைக் குறிப்பாகக் கொண்டு பல விதிகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இணையத்திலும் அதனைப் பற்றி பல விரிவான கட்டுரைகளும் இருக்கின்றன. ஆகையால் அதை முழுவதுமாக இங்கே நான் எழுத விழையவில்லை.

பொதுவாகப் பார்க்கும்போது இந்த ஒற்றுப்பிழைகள் படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துவது இல்லை; அதாவது பிழை இருப்பது தெரிந்தாலும் அதை ஓரங்கட்டிவிட்டு நாம் படிப்பதைத் தொடரலாம். ஆனால் சில பயன்பாடுகளில் ஒற்றுப்பிழை இருந்தால் அது நாம் எத்தனை முறைப் படித்தாலும் ஏதோ ஒரு உறுத்தலை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி ஒன்று தான் சுட்டெழுத்துக்களுடன் வரும் ஒற்றெழுத்து.

"இவன் ரொம்ப கொழப்புறான்யா. அது என்ன சுட்டெழுத்து ?" என்று கேட்பவர்களுக்கு, விக்கிபீடியா கொடுக்கும் பதில் இதோ:

சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உயிரெழுத்துகளில் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் ஆகும்.

(இதில் 'உ' என்ற சுட்டெழுத்து, தமிழ் நாட்டில் புழக்கத்தில் இல்லை. விளக்கமான பதிவு இங்கே)

(எ.கா.)
அ + காலம் = அக்காலம்
இ + மாதம் = இம்மாதம்
அ + நேரம் = அந்நேரம்
இ + வழி = இவ்வழி

இந்த பயன்பாடு நாம் பேசும் பொதுத்தமிழ் வழக்கத்தில் இல்லாதபோதும், தமிழ் மேடைகளிலும், உரைநடைகளிலும், கவிதை புனைவோரிடமும் இன்னும் வழக்கத்தில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. இது கடினமான பயன்பாடு இல்லை என்றபோதும், இது சில இடங்களில் எனக்கு ஒரு புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதை விளக்க, ஒரு எடுத்துக்காட்டை பார்போம். என் நண்பன் எழுத விரும்பியது அ + ரணத்தால் = ?
விடையைப் படிப்பதற்கு முன், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில கேள்விகளுக்கும் விடையளிக்க முயல்க:

1. அ + ரதம் = ? 
2. அ + ருசி = ?
3. இ + லஞ்சம் = ?
4. இ + ரேகை = ?
5. அ + லாபம் = ?
6. இ + யாக்கை = ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளிக்க முடிந்தால் கூட நீங்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர். என் நண்பனின் கேள்விக்கு விடையளிக்க முயற்சித்தபோது, முதலில் தோன்றியது அர்ரணத்தால். ஆனால் இப்படி எழுதியதாக எனக்கு சற்றும் நினைவு இல்லை. அடுத்த யோசனை அற்ரணத்தால். கண்டிப்பாக இதுவும் சரி இல்லை என்றே தோன்றியது. அ ரணத்தால் என்று பிரித்தே எழுதலாம் என்றால், இலக்கண ரீதியாக சரி தான் என்றபோதும், கவிதைப் பயன்பாட்டிற்கு பொருந்தி வரவில்லை. கூகுளில் நேரடியாக  இவற்றை தேடியபோதும் எதுவும் விடை தென்படவில்லை. இதைத் தேட ஆரம்பித்ததில் இணைய வழியில் பல தமிழ்த் தகவல்களையும், தமிழ் நாட்டுத் தமிழுக்கும், யாழ்ப்பாணத் தமிழுக்கும் உள்ள சில வேறுபாடுகளையும் கடந்து வந்தன என் விழிகள். அவற்றை விவரிக்க ஆரம்பித்தால் நம் தலை சுற்றும். 

இப்போது நம் கேள்விகளுக்கு விடையளிக்க, யாரோ ஒரு நண்பர் இணையத்தில் பதிந்திருந்த இந்த புணர்ச்சி விதி உதவும்:

சுட்டெழுத்துக்களும் எகர வினாவெழுத்தும் உயிரோடும் இடையின மெய்யோடும் புணரின், இடையில் வகரந் தோன்றும்; உயிரொடு புணரின் வகரம் இரட்டிக்கும்; வல்லின மெல்லின மெய்களோடு புணரின் அவ்வம் மெய்கள் மிகும்.

இதில்,
சுட்டெழுத்து + உயிரெழுத்து (அ + உயிர் = அவ்வுயிர், அ + இடம் = அவ்விடம்)
சுட்டெழுத்து + மெல்லினம் (அ + மக்கள் = அம்மக்கள், இ + நாய் = இந்நாய்)
சுட்டெழுத்து + வல்லினம் (இ + பாடல் = இப்பாடல், அ + தாமரை = அத்தாமரை)
போன்றவை நாம் ஓரளவிற்கு நாம் அறிந்தவையே.

கேள்விகளை மறுபடியும் ஒரு முறை படித்தோமானால், 
சுட்டெழுத்து + இடையினம் = ?  என்பதே நம் கேள்விக்கு விடை. மேற்கூறிய விதிப்படி,

1. அ + ரதம் = அவ்ரதம்
2. அ + ருசி = அவ்ருசி
3. இ + லஞ்சம் = இவ்லஞ்சம்
4. இ + ரேகை = இவ்ரேகை
5. அ + லாபம் = அவ்லாபம்
6. இ + யாக்கை = இவ்யாக்கை

என்பதே விடைகளாகும். இது மற்ற இடையின சொற்களுக்கும் பொருந்தும்.
ஆக, நண்பனின் கேள்விக்கு விடை "அவ்ரணத்தால்" !

இது பலருக்கு சாதாரண விஷயமாகத் தோன்றலாம். இருந்தபோதும், என்னைப் போல் சிலருக்கு இந்த பயன்பாடுகள் மறந்து போயிருக்கக் கூடும். அதை இந்தக் கட்டுரை மூலமாக நினைவுப் படுத்தவே விரும்பினேன்.

அது மட்டுமல்லாமல், சிலர் தமிழை திருத்துவதாகவும் செம்மைப்படுத்துவதாகவும் எண்ணிக் கொண்டு, வேற்றுமொழி வார்த்தைகளைத் தமிழில் எழுதும்போது தவறான உச்சரிப்புகளைப் பரப்புகின்றனர்.

உதாரணம்,

விஷயம் = விசயம்
ஜப்பான் = சப்பான்
இராஜ ராஜ சோழன் = இராச ராச சோழன்

போன்றவை. இராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளில் கூட ஜ, ஷ, ஹ போன்ற எழுத்துக்களை உபயோகித்திருப்பதை இப்போதும் நம்மால் காண முடியும். அப்படியிருக்க, அவன் பெயரையே திருத்தும் யோக்யதையை நமக்கு யார் கொடுத்தது? தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்த்திருமுறை நூல்களை ஏடுகளில் ஏற்றிய பெருமை உடைய அவனை விடவா இவர்கள் தமிழ்ப்பற்று கொண்டவர்கள்? பல வேற்று மொழி வார்த்தைகளையும் கூட உள்வாங்கி வளர்ந்து நிற்பதால் தான் பல மொழிகள் இன்னும் புழக்கத்திலிருக்கின்றன. அதைத் தவறு என்று ஒதுக்கி விட வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், வேற்று மொழி வார்த்தைகளை தவிர்த்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாமே ஒழிய, அதை நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உச்சரிப்பது ஏற்புடையது அல்ல. அப்படிச் செய்பவர்களைத் தமிழின் நலம் விரும்பிகளாக ஏற்கவும் என் மனம் மறுக்கிறது.

ஆகையால், இது போன்ற தேவை இல்லாத ஆராய்ச்சிகளை விட்டு விட்டு இருக்கும் தமிழின்பத்தை முறையாக பிழை இல்லாமல் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே தமிழ் வாழும் என்பதே என் கருத்து.

உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்க. 
நன்றி ! 

சிறப்புத் தகவல்: 
இணையத்தில் மேலும் பல தமிழ்த் தகவல்களைப் பகிர விக்கிபீடியா கொடுக்கும் ஓர் அறிய வாய்ப்பு:
விக்கிப்பீடியா: 2013 கட்டுரைப் போட்டி - 30,000/- இந்திய ரூபாய் பரிசு!


குறளோசை