Sunday, May 16, 2021

குரு சிஷ்யன் - 1

 ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒரு துறவி தன் சீடர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.


துறவி சொன்னார், "வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமென்றால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஆனால் அதை உங்களுக்காக செய்யுங்கள். உங்கள் மனதார செய்தீர்கள் என்றால் நீங்கள் எதையும் எதிர்பார்த்து வருத்தமடைய மாட்டீர்கள்."


அப்போது ஒரு சீடனுக்கு சந்தேகம் எழுந்தது. "குருவே, நான் பலருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியிருக்கிறேன். ஆனாலும் அவர்கள் நன்றி மறந்து எனக்கு துரோகம் செய்கிறார்கள். நான் எப்படி வருத்தமடையாமல் இருப்பது?" என்று வினவினான்.


துறவி புன்முறுவலுடன், "நீ அவர்களிடத்தில் நன்றியை எதிர்பார்கிறாய். அதனால் தான் வருத்தமடைகிறாய்" என்றார்.


சீடனுக்கு அந்த பதில் திருப்தியாக இல்லை. அவன் மீண்டும், "செய்த உதவிக்கு நன்றியைக் கூட எதிர்பார்க்காமல் எப்படி உதவுவது குருவே?" என்றான்.


துறவியோ, "சீடனே, நீ தேன் கூட்டிலிருந்து தேனெடுத்து உண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்.


அதற்கு சீடன், "ஓ, சாப்பிட்டிருக்கிறேனே!" என்றான்.


துறவி கேட்டார், "அந்த தேனை உனக்கு சேகரித்துத் தந்த தேனீக்கு என்றாவது நீ நன்றி தெரிவித்திருக்கிறாயா?"


சீடன், "இல்லை குருவே" என்றான்.


"அது போல தான். நீ நன்றி காட்டவில்ல்லை என்று தேனீ வருத்தப்படுவதில்லை. அது தன் வேலையான தேன் சேகரிப்பதை தொடர்ந்து செய்கிறது. அதே போல் நீயும் எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்." என்று பொறுமையாக பதிலளித்தார்.


ஏதோ புரிந்தது போல் தலையை ஆட்டிவிட்டு அமர்ந்த சீடன், மறுபடியும் எழுந்தான். "குருவே, அப்படியே பார்த்தாலும் தேனீ ஒன்றும் தேனை சுயமாக உருவாக்கி நமக்கு தருவதில்லையே. அதுவே மலர்களிடமிருந்து தேனை களவாடித்தானே சேர்க்கிறது. நான் ஏன் தேனீக்கு நன்றி சொல்ல வேண்டும்?" என்றான்.


அதற்கு துறவி சற்றும் சலனப்படாமல், "முற்றிலும் உண்மை. அதே போல் நீ மற்றவர்க்கு கொடுத்து உதவிய எதையுமே நீ பிறக்கும்போது இந்த உலகிற்கு கொண்டு வரவில்லை. நீயும் அதை களவாடித்தானே சேர்த்திருக்கிறாய். நீ நன்றியை எதிர்பார்க்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கேட்டார்.


புரிந்தும் புரியாதவனாய், "குருவே. என் சந்தேகம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் தேன் எடுக்க முயற்சி செய்யும்போது என்னை பல தேனீக்கள் கொட்டியிருக்கின்றன. நன்றி மறந்தவர்களைக் கண்டால் எனக்கும் அப்படித்தானே கோபம் வரும். அது நியாயம் தானே?" என்று கேட்டான்.


துறவி அவனை புன்னகையோடு நோக்கினார். சீடனோ, துறவியால் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றே எண்ணினான். தான் கூறியது தான் சரி என்று ஒப்புக்கொள்வார் என்று அவனுக்கு தோன்றியது.


ஆனால் துறவியோ, "சீடனே, உன்னை தேனீக்கள் கொட்டியதாகக் கூறினாயே, அதற்கு நீ என்ன வைத்தியம் செய்தாய்?" என்றார்.


சீடனுக்கோ தன் கேள்விக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தோன்றியது. இருந்தாலும் குருவுக்கு பதிலளிக்கும் வகையில், "கொட்டிய இடத்தில் இருந்த கொடுக்கை நீக்கிவிட்டு சுண்ணாம்பு வைத்தேன். ஓரிரு நாட்களில் வலி குறைந்துவிட்டது" என்றான்.


அதற்கு துறவி, "மிகச்சிறப்பு. ஆனால் உன்னை கொட்டிய தேனீக்கு என்ன ஆனது தெரியுமா? கொடுக்கை இழந்த தேனீ அன்றே உயிர்விட்டது. அப்படித்தான் நன்றி மறந்தவர்களைக் கண்டு கோபம் கொண்டு அவர்களை புண்படுத்துவதில் நீ நேரம் செலவிட்டால், அது அவர்களுக்கு ஒரு சிறிய காயத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். ஆனால் அது உன் வாழ்க்கையையே கெடுத்துவிடும். பறந்து சென்ற மற்ற தேனீக்கள் எப்படி தன்னம்பிக்கையோடு மீண்டும் தேனை சேர்க்கிறதோ, அப்படியே நீயும் உன் வாழ்க்கையில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். தவறான மனிதர்களின் செயல்களால் சலனமுறாதே..!" என்று கூறி முடித்தார்.


சீடன் முற்றும் விளங்கியவனாய் துறவியின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

Thursday, July 11, 2019

உறவு

ஆயிரம் உரசல்களுக்கு பிறகும்
விரிசல் இன்றி தொடர்கின்றன
தண்டவாளங்கள்..

Saturday, March 21, 2015

இழப்பு

நெருக்கமானவர்களின் மரணத்தை விட
நம்மை அதிகம் பாதிக்கிறது
அவர்களின் அலைப்பேசி எண்ணும்
ஃ பேஸ்புக் கணக்கும்..!!

Monday, October 21, 2013

தமிழும் தமிழனும் - 1

முன்குறிப்பு: இது தமிழாராய்ச்சிக் கட்டுரை அல்ல; இலக்கணப் பாடமும் அல்ல. நண்பன் பகிர்ந்திருந்த கவிதை ஒன்றை படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய சிலபல எண்ணங்களுக்கும், அறிந்து கொண்ட சில விஷயங்களுக்கும் எழுத்து வடிவம் கொடுப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

என்ன தான் நாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் படித்து வளர்ந்திருந்தாலும், தமிழில் உள்ள பல நுணுக்கங்கள் நம் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை. தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கும், தமிழ் இலக்கியப் புத்தகங்களை அதிகம் படிப்பவர்களுக்கும் கூட ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுவதென்பது சற்றுக் கடினமாகவே ஆகிவிட்டது. அதிலும் என்னைப் போல் சிலர், ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுகிறேன் பேர்விழி என்று ஒற்றெழுத்துக்களை எல்லா இடங்களிலும் விளாசிவிடுவதும் சகஜமாகிவிட்டது.

அது என்ன ஒற்றுப்பிழை ?

ஒற்றெழுத்து என்பது இருவேறு சொற்கள் சந்திக்கும்போதோ புணரும்போதோ சில சமயங்களில் மிகுந்து ஒலிக்கும் மெய்யெழுத்தைக் குறிக்கும். இந்த ஒற்றெழுத்தை எழுத வேண்டிய இடங்களில் எழுதாமல் விட்டாலோ, எழுதக்கூடாத இடத்தில் எழுதினாலோ, அது ஒற்றுப்பிழை (அ) சந்திப்பிழை எனப்படும்.

(எ.கா.)
கடைக்கு + சென்றேன் = கடைக்குச் சென்றேன் (ச் இல்லையேல் பிழை)
நல்ல + தம்பி = நல்லத்தம்பி (த் இருந்தால் பிழை)
தாய் + பாசம் =  தாய்ப்பாசம் (ப் இல்லையேல் பிழை)

எங்கு ஒற்று மிகும், எங்கு மிகாது என்பதற்கு தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியத்தைக் குறிப்பாகக் கொண்டு பல விதிகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இணையத்திலும் அதனைப் பற்றி பல விரிவான கட்டுரைகளும் இருக்கின்றன. ஆகையால் அதை முழுவதுமாக இங்கே நான் எழுத விழையவில்லை.

பொதுவாகப் பார்க்கும்போது இந்த ஒற்றுப்பிழைகள் படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துவது இல்லை; அதாவது பிழை இருப்பது தெரிந்தாலும் அதை ஓரங்கட்டிவிட்டு நாம் படிப்பதைத் தொடரலாம். ஆனால் சில பயன்பாடுகளில் ஒற்றுப்பிழை இருந்தால் அது நாம் எத்தனை முறைப் படித்தாலும் ஏதோ ஒரு உறுத்தலை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி ஒன்று தான் சுட்டெழுத்துக்களுடன் வரும் ஒற்றெழுத்து.

"இவன் ரொம்ப கொழப்புறான்யா. அது என்ன சுட்டெழுத்து ?" என்று கேட்பவர்களுக்கு, விக்கிபீடியா கொடுக்கும் பதில் இதோ:

சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உயிரெழுத்துகளில் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் ஆகும்.

(இதில் 'உ' என்ற சுட்டெழுத்து, தமிழ் நாட்டில் புழக்கத்தில் இல்லை. விளக்கமான பதிவு இங்கே)

(எ.கா.)
அ + காலம் = அக்காலம்
இ + மாதம் = இம்மாதம்
அ + நேரம் = அந்நேரம்
இ + வழி = இவ்வழி

இந்த பயன்பாடு நாம் பேசும் பொதுத்தமிழ் வழக்கத்தில் இல்லாதபோதும், தமிழ் மேடைகளிலும், உரைநடைகளிலும், கவிதை புனைவோரிடமும் இன்னும் வழக்கத்தில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. இது கடினமான பயன்பாடு இல்லை என்றபோதும், இது சில இடங்களில் எனக்கு ஒரு புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதை விளக்க, ஒரு எடுத்துக்காட்டை பார்போம். என் நண்பன் எழுத விரும்பியது அ + ரணத்தால் = ?
விடையைப் படிப்பதற்கு முன், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில கேள்விகளுக்கும் விடையளிக்க முயல்க:

1. அ + ரதம் = ? 
2. அ + ருசி = ?
3. இ + லஞ்சம் = ?
4. இ + ரேகை = ?
5. அ + லாபம் = ?
6. இ + யாக்கை = ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளிக்க முடிந்தால் கூட நீங்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர். என் நண்பனின் கேள்விக்கு விடையளிக்க முயற்சித்தபோது, முதலில் தோன்றியது அர்ரணத்தால். ஆனால் இப்படி எழுதியதாக எனக்கு சற்றும் நினைவு இல்லை. அடுத்த யோசனை அற்ரணத்தால். கண்டிப்பாக இதுவும் சரி இல்லை என்றே தோன்றியது. அ ரணத்தால் என்று பிரித்தே எழுதலாம் என்றால், இலக்கண ரீதியாக சரி தான் என்றபோதும், கவிதைப் பயன்பாட்டிற்கு பொருந்தி வரவில்லை. கூகுளில் நேரடியாக  இவற்றை தேடியபோதும் எதுவும் விடை தென்படவில்லை. இதைத் தேட ஆரம்பித்ததில் இணைய வழியில் பல தமிழ்த் தகவல்களையும், தமிழ் நாட்டுத் தமிழுக்கும், யாழ்ப்பாணத் தமிழுக்கும் உள்ள சில வேறுபாடுகளையும் கடந்து வந்தன என் விழிகள். அவற்றை விவரிக்க ஆரம்பித்தால் நம் தலை சுற்றும். 

இப்போது நம் கேள்விகளுக்கு விடையளிக்க, யாரோ ஒரு நண்பர் இணையத்தில் பதிந்திருந்த இந்த புணர்ச்சி விதி உதவும்:

சுட்டெழுத்துக்களும் எகர வினாவெழுத்தும் உயிரோடும் இடையின மெய்யோடும் புணரின், இடையில் வகரந் தோன்றும்; உயிரொடு புணரின் வகரம் இரட்டிக்கும்; வல்லின மெல்லின மெய்களோடு புணரின் அவ்வம் மெய்கள் மிகும்.

இதில்,
சுட்டெழுத்து + உயிரெழுத்து (அ + உயிர் = அவ்வுயிர், அ + இடம் = அவ்விடம்)
சுட்டெழுத்து + மெல்லினம் (அ + மக்கள் = அம்மக்கள், இ + நாய் = இந்நாய்)
சுட்டெழுத்து + வல்லினம் (இ + பாடல் = இப்பாடல், அ + தாமரை = அத்தாமரை)
போன்றவை நாம் ஓரளவிற்கு நாம் அறிந்தவையே.

கேள்விகளை மறுபடியும் ஒரு முறை படித்தோமானால், 
சுட்டெழுத்து + இடையினம் = ?  என்பதே நம் கேள்விக்கு விடை. மேற்கூறிய விதிப்படி,

1. அ + ரதம் = அவ்ரதம்
2. அ + ருசி = அவ்ருசி
3. இ + லஞ்சம் = இவ்லஞ்சம்
4. இ + ரேகை = இவ்ரேகை
5. அ + லாபம் = அவ்லாபம்
6. இ + யாக்கை = இவ்யாக்கை

என்பதே விடைகளாகும். இது மற்ற இடையின சொற்களுக்கும் பொருந்தும்.
ஆக, நண்பனின் கேள்விக்கு விடை "அவ்ரணத்தால்" !

இது பலருக்கு சாதாரண விஷயமாகத் தோன்றலாம். இருந்தபோதும், என்னைப் போல் சிலருக்கு இந்த பயன்பாடுகள் மறந்து போயிருக்கக் கூடும். அதை இந்தக் கட்டுரை மூலமாக நினைவுப் படுத்தவே விரும்பினேன்.

அது மட்டுமல்லாமல், சிலர் தமிழை திருத்துவதாகவும் செம்மைப்படுத்துவதாகவும் எண்ணிக் கொண்டு, வேற்றுமொழி வார்த்தைகளைத் தமிழில் எழுதும்போது தவறான உச்சரிப்புகளைப் பரப்புகின்றனர்.

உதாரணம்,

விஷயம் = விசயம்
ஜப்பான் = சப்பான்
இராஜ ராஜ சோழன் = இராச ராச சோழன்

போன்றவை. இராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளில் கூட ஜ, ஷ, ஹ போன்ற எழுத்துக்களை உபயோகித்திருப்பதை இப்போதும் நம்மால் காண முடியும். அப்படியிருக்க, அவன் பெயரையே திருத்தும் யோக்யதையை நமக்கு யார் கொடுத்தது? தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்த்திருமுறை நூல்களை ஏடுகளில் ஏற்றிய பெருமை உடைய அவனை விடவா இவர்கள் தமிழ்ப்பற்று கொண்டவர்கள்? பல வேற்று மொழி வார்த்தைகளையும் கூட உள்வாங்கி வளர்ந்து நிற்பதால் தான் பல மொழிகள் இன்னும் புழக்கத்திலிருக்கின்றன. அதைத் தவறு என்று ஒதுக்கி விட வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், வேற்று மொழி வார்த்தைகளை தவிர்த்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாமே ஒழிய, அதை நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உச்சரிப்பது ஏற்புடையது அல்ல. அப்படிச் செய்பவர்களைத் தமிழின் நலம் விரும்பிகளாக ஏற்கவும் என் மனம் மறுக்கிறது.

ஆகையால், இது போன்ற தேவை இல்லாத ஆராய்ச்சிகளை விட்டு விட்டு இருக்கும் தமிழின்பத்தை முறையாக பிழை இல்லாமல் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே தமிழ் வாழும் என்பதே என் கருத்து.

உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்க. 
நன்றி ! 

சிறப்புத் தகவல்: 
இணையத்தில் மேலும் பல தமிழ்த் தகவல்களைப் பகிர விக்கிபீடியா கொடுக்கும் ஓர் அறிய வாய்ப்பு:
விக்கிப்பீடியா: 2013 கட்டுரைப் போட்டி - 30,000/- இந்திய ரூபாய் பரிசு!


Thursday, May 9, 2013

பொன் காலைப் பொழுது

குயில் குரல் கேட்டு கண் விழித்தேன்
கார்மேகமூட்டத்தினூடே 
செந்நிறப் பிழம்பாய் தோன்றியது சூரியன் 
அவ்வொளியை நோக்கி 
பறந்து கொண்டிருந்தன இரு பறவைகள் 
வெண்மலர்களின் நடுவில்
நாட்டியமாடின கருவண்டுகள்
சிறு  குன்றொன்றுக்கு அப்பால் 
செஞ்சிப்பிக்குள் பளபளத்தன வெண் முத்துக்கள்
முழு நிலவிற்குள் அடங்கி போயிருந்தன 
இவ்வனைத்தும் !

இமைகள் மெல்ல விரிகையில்,

"அத்தான்" என்ற உன் அழைப்போடு
உன் கருங்கூந்தல் என்னை வருட
உன் புருவங்களிடையில் 
பதிந்திருந்த வட்ட பொட்டு ஒளி வீச
துருதுருவென்று அலைந்து கொண்டிருந்த 
உன் கருவிழிகளின் கீழிருந்த 
கூர் மூக்கைத் தாண்டி
செவ்விதழ் சிந்திய புன்சிரிப்போடு
உன் வட்ட முகம் பார்த்து 
விடிந்துகொண்டிருந்தது என் காலைப் பொழுது  !

Wednesday, April 3, 2013

கலைகளம்


தினம் தினம் உன்னைத் 
தீண்டிக் களிக்கின்றேன் 
ஒவ்வொரு முறையும் 
வர்ணஜாலங்கள் காட்டுகிறாய்

உன் கண்களின் மூலம் 
நான் உலகத்தை பார்க்கிறேன்

உன் மீது கொண்ட மோகம் 
காண்பவை அனைத்தையும் 
அழகாய் மிளிரச் செய்கிறது

உன் வண்ணங்களில் திளைக்கின்றேன்
நீ என்னை மீண்டும் மீண்டும்
பூரிப்படையச் செய்கிறாய்

உன் வளைவுகளில் வருடி
உன்னை உசுப்பேற்றி
நடுக்கமின்றி இறுக்கி அணைத்து 
என் ஆள்காட்டி விரல்கொண்டு
அழுத்திய நொடி
உன் முத்த சத்தத்துடன் பிரசவிக்கிறது
நான் எடுத்த வண்ண புகைப்படம் !

காமிரா என் காதலி !! :)

Thursday, February 14, 2013

காதலர் தினம்

படபடக்கும் என் இதயத் துடிப்பை
பக்குவப்படுத்த முயல்கிறது 
என் மார்போடு அணைத்திருந்த 
வாழ்த்து அட்டையும் 
ரோஜா மொட்டும் !

ஆயிரம் கதைகள் பேசினாலும்
உள்ளத்தில் உள்ளதை மட்டும் 
மறைக்கும் உன் கண்களை
காட்டிக் கொடுக்கிறது
உன் புத்தகத்திலிருந்து எட்டிப் பார்க்கும் 
செவ்விதயம் பொரித்த கைக்குட்டை !

வார்த்தைகளை விழுங்கிவிட்டு 
பார்வைகளை மட்டுமே
பரிமாறிக்கொண்டிருந்த 
நம் இருவரின் மௌனத்தையும் 
கலைத்துவிட்டு போகிறது 
தென்றல் காற்று !

எதுவும் பேசாத போதும் 
எல்லாம் புரிந்ததாய் 
சிரித்துக் கொள்கிறோம் !

உன் கண்முன்னே மலர் நீட்டி 
"நீ என் உயிரோடு கலப்பாயா ?"
என்று நான் கேட்ட நொடி 
நான் ஆண்மகன் என்றும் உணராமல்
வெட்கப்படுகிறது என் உள்ளம் ! 

அதை நீ வாங்கிக் கொண்டபோதே
சம்மதம் தெரிவித்தது 
உன் விழியில் வழிந்த கண்ணீர் !

உன்னிடம் கேட்காமலேயே 
நீ எனக்காக கொண்டு வந்திருந்த 
கைக்குட்டை எடுத்து 
உன் கண்ணீர் துடித்தன என் விரல்கள் !

இது போதும் அன்பே 
நாம் காதலில் வென்றுவிட்டோம் 
காலத்தையும் வென்றுவிட்டோம் !

குறளோசை