Tuesday, September 25, 2012

கானல் நீர்

"I know only one culture - That is Agriculture." - சர்தார் வல்லபாய் படேலின் வார்த்தைகள் இவை. நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் ஏற்ப்பட்டு வந்தாலும், விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை நம்மால் மறுக்க முடியாது. இந்த வலைப்பூவில் என் வார்த்தைகளைக் கோர்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம், இணையம் பற்றி இம்மி அளவும் தெரியாமல் நம் நாட்டின் எங்கோ ஓர் மூலையில், வயல் வெளியில் விதைத் தூவிக் கொண்டிருக்கிறான் ஒரு விவசாயி என்பதை நம்மால் மறுக்க முடியாது. அவன் நம்பி இருப்பது நிலங்களையும் நீர் நிலைகளையும் மட்டுமே.
 
பெரும்பகுதி தமிழ் நாட்டு விவசாயிகளை வாழ வைப்பது இரண்டு தாய்மார்கள்; ஒன்று பூமித் தாய், மற்றொன்று காவிரித் தாய். ஒரு தாய் விலை மகளாக மாறி வருகிறாள். விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி வருகின்றன. அதைக் கண்டும் காணாதது போல் வெட்கமின்றி அதில் பங்கெடுத்துக் கொள்ளும் தனயன்களாய் நிற்கிறோம் நாம். மற்றொரு தாயோ, பிறந்த வீட்டிலேயே சிறைப்பட்டு கிடக்கிறாள். காவிரித் தாய்க்கு கர்நாடக மக்கள் வேறு, தமிழக மக்கள் வேறோ ? ஒரு தாய் மக்களுள் வேற்றுமை ஏது ? இடர்கால பகிர்வுப் படி நீர் வழங்கக் கூட கர்நாடக அரசு மறுக்கிறது. பிரதமர் பேச்சுக்கோ, நீதி மன்ற உத்தரவுகளுக்கோ மரியாதை இல்லை.
 
வான் மழை பொய்த்து, பயிர்கள் வாடும்போதெல்லாம், காவிரி நீரை நம்பியே காலத்தைப் போக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். வரும் காலங்களில் நீராதரங்களும், நிலத்தடி நீர்வளமும் வற்றி போகும் நிலை ஏற்பட்டால் நமக்கு மிஞ்சப்போவது, மெருக்கேற்றப்பட்ட தார் சாலைகளில் சுட்டெரிக்கும் வெயிலில் ஐம்பதடி தூரத்தில் மட்டுமே தென்படும் கானல் நீரும், மலடாய்ப் போட பூமியை நம்பி ஏமாந்து போன விவசாயியின் கண்ணீரும் மட்டுமே.
 
நீரில்லாமல் வாடுவது பயிர்கள் மட்டுமல்ல, அதை நம்பி உள்ள பல வயிறுகளும் தான் என்பதை அரசாங்கங்கள் புரிந்து கொள்ளும் நாள் எப்போது வருமோ ?

2 comments:

Lakshmipathy said...

Sugan,

Is this the problem of rain only occurs in our country or does it happens in every other country. How do other countries tackle this problem. Do they depend Round the clock on the Rain for Agriculture? What can we learn from them. How can we use it for us? Is there any thing we can lend as an investor for the Farmers to take care? Is these kind of solutions not worthy enough to think?

Sugan said...

இந்த பிரச்சினை நமக்கு மட்டுமே நிகழ்வது அல்ல. பல சமயங்களில் இரு நாடுகளுக்கு இடையில் கூட நீராதாரங்களைப் பகிர்வதில் சிக்கல்கள் ஏற்பட்டதுண்டு. ஆனால் அங்கெல்லாம் இந்த பகிர்வை தீர்மானிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் இரு நாடுகளுக்கும் பொதுவான ஓர் அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் முடிவை இரு நாடுகளும் ஏற்றுகொள்ளும் பக்குவம் காணப்படுகிறது. உதாரணமாக இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கங்கை நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, ஐ.நா சபை போன்ற நடுநிலை அமைப்புகளின் தலையீட்டால், 1971 -ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது முப்பது வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பகிர்ந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டால், இரு நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தை கூட்டி, அவசர கால (அ) இடர் காலப் பகிர்வு வரைமுறைகளின்படி, இரு சாராருக்கும் பாதிப்பு இல்லாமலும், நட்புறவிற்கு பங்கம் விளைவிக்காத வகையிலும் முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த அமைப்பின் உத்தரவை இரு நாட்டுப் பிரதிநிதிகளும் ஏற்றுகொள்கிறார்கள்.

இதே போல் ஆப்பிரிக்காவில் நைல் நதி நீரை பங்கிடுவதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ஐ.நா சபையின் சுற்றுச் சூழல் செயல்திட்டம் (United Nations Environment Programme - UNEP), வகுத்துள்ள வரைமுறைகளை இந்த ஆவணத்தில் விரிவாகக் காணலாம்:
http://www.ihwb.tu-darmstadt.de/media/fachgebiet_ihwb/lehre/iwrdm/literature/watersharinginthenilerivervalley.pdf


காவிரி நதி நீர் ஆணையமும் இது போன்ற ஒரு நாடு நிலை அமைப்பே. என்ற போதிலும், மாநிலங்களுக்குள் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகளாலும், இதன் மூலம் வோட்டு வங்கியை இழந்து விடுவோமோ என்ற பயத்தினாலும், நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை ஏற்க மாநில அரசுகள் முன் வருவதில்லை. அதை மறைக்க, போராட்டங்களின் பெயரால் மக்கள் தூண்டிவிடப் படுகிறார்கள். இந்த ஆணையத்தின் தலைவராக பிரதமரே இருந்த போதிலும், அவரது செல்வாக்கு இங்கு எடுபடாமல் போனதே மிகவும் வருத்தம் அளிக்கிறது. மிகவும் சுமூகமாக பேச்சுவார்த்தைகளின் மூலமும், உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து இரு சாராரின் கோரிக்கைகளையும் சமமாகக் கருதியும் எடுக்கப்படவேண்டிய முடிவுகள், அரசியல் ஆதாயங்களுக்காக நீதிமன்றங்களிடம் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதே நிதர்சனம். நீதி மன்றங்களின் தீர்ப்புகளுக்கும் மரியாதை இல்லாத கால கட்டம் வருமேயானால், வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) பற்றியும், தேசிய ஒருமைப்பாடு (National Integration) பற்றியும், சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் மட்டுமே பேசி சிலாகித்திருப்பதில் பயனொன்றும் இல்லை.

வாழ்க ஜனநாயகம் !!

குறளோசை

காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு.