என் பார்வையின் ஓரத்தில்
காற்றில் மிதந்தது குப்பைக் காகிதம்
சிறு பறவையோ என்றெண்ணி
சட்டென்று திரும்பி ஏமாந்தன என் விழிகள் !
என் சாலையின் ஓரத்தில்
இலைகளையும் கிளைகளையுமே வெறித்துப் பார்த்துக் கொண்டும்,
எதிர்வரும் வாகனங்களைக் கண்டு விலகக்கூடத் தோன்றாமல்
அதன் வண்ணங்களை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறது என் மனது !
என் ஜன்னலின் ஓரத்தில்
அமாவாசை என்று கூட அறியாமல்
நிலவின் வருகைக்காக
ஏங்கித் தவிக்கிறது என் எண்ணம் !
கா கா என்று கரைந்தபோது
தடி கொண்டு விரட்டியவன்
இன்று அந்த குரல் கேட்டவுடன்
சற்றும் சலனமின்றி அருகில் சென்று நோட்டமிடுகின்றேன் !
"அங்க என்ன நிலாவா காயுது ?"
என்ற என் மனைவியின் கேள்வி
காதில் விழாதவனாய் மொட்டை மாடி வெயிலில்
வட்டமிடும் பருந்தை வேடிக்கை பார்த்து நிற்கின்றன என் கால்கள் !
நேற்றுவரை சாதாரணமாகத்
தோன்றியவை எல்லாம்
திடீரென்று வியக்க வைக்கிறது
இன்று முதல் !
இது என்ன மன நோயா ?
ஆம் - விழி உறங்கும்பொழுது கூட
மனம் உறங்கவிடாமல் துடிக்க வைக்கிறது
நான் புதியதாய் வாங்கிய
நிழற்படக் கருவி !!
2 comments:
Azhagaana kavithai :)
Nandri..
Post a Comment